இந்தியா
Typography

தமிழகத்தின் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுனர் வித்யாசாகரிடம் மறுபடியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுனர் வித்யாசாகரை சந்தித்து பேசிய சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது சகாக்களான கே.ஆர்.ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் ஆளுனரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஆங்கிலத் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க கேள்வி எழுப்பினோம். ஆனால் எங்களைப் பேச விடாமல் வெளியேற்றி விட்டார்கள். சட்டப்பேரவையில் ஆதாரமில்லாமல் இதுபற்றி பேசக் கூடாது. என்னிடம் தனிப்பட்ட முறையில் ஆதாரத்தை கொடுக்கவேண்டும் என சபாநாயகர் கூறினார். நானும் சபாநாயகர் அறைக்குச் சென்று வீடியோ ஆதாரத்தை சி.டி.யாக கொடுத்துள்ளேன். பேரவை கூடும் போதுதான் சபாநாயகர் முடிவு குறித்து தெரியும்.

இதனிடையே, வீடியோ சர்ச்சை தொடர்பாக ஆளுநரை சந்தித்து முறையிட்டுள்ளோம். வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சட்டவிரோத பணப் பரிவரித்தனை குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

குதிரை பேரத்தால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. அந்த ஆட்சிதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும். மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக சட்டப்பேரவையில் நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டோம்.

இந்த விவகாரத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். கோரிக்கைகளை சட்டரீதியாக கலந்தாலோசித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார் ஆளுநரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யோசித்து முடிவெடுப்போம்'' என்றார் ஸ்டாலின்.

Most Read