இந்தியா
Typography

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை பாரதிய ஜனதாக் கட்சியின் குழு சந்தித்துப் பேசியுள்ளது. எனினும், இந்தச் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

தற்போது குடியரசுத் தலைவராகவுள்ள பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 25ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது. இதையொட்டி, ஜூலை 17ஆம் திகதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய வருகிற 28ஆம் திகதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.

இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பா.ஜ.க தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் கொண்ட மூவர் குழுவை அமைத்து உள்ளார். இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்கள்.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தென்கொரியா சென்று இருப்பதால், அவர் தவிர மூவர் குழுவில் உள்ள மற்ற 2 தலைவர்களான ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகிய இருவரும் நேற்று காலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவருடைய எண்.10 ஜன்பத் இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.

பா.ஜ.க தலைவர்களின் இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் உடன் இருந்தனர். இரு தரப்பிலும் வெகு நேரம் ஆலோசனை நடத்தப்பட்டாலும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் பொதுவாக நிறுத்தக்கூடிய வேட்பாளர் பெயர் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி மல்லிகார்ஜூன கார்கே கூறும்போது, ‘‘குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை முடியும்வரை பா.ஜ.க தலைவர்கள் குறிப்பிட்ட எந்த ஒருவரின் பெயரையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஒருமித்த கருத்து என்பது பற்றிய கேள்வியே எழவில்லை.” என்றுள்ளார்.

குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘பா.ஜ.க தலைவர்கள் யாருடைய பெயரையாவது கூறுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சொல்லவில்லை. அதேநேரம் எங்களிடம் யாருடைய பெயரையாவது குறிப்பிட விரும்புகிறீர்களா? என்று கேட்டனர். ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை அவர்கள் எங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களது மனதில் யாருடைய பெயராவது இருக்கலாம். ஆனால் எந்த ஒரு பெயரும் எங்களது சந்திப்பின்போது கூறப்படவில்லை. அவர்கள் பெயரை குறிப்பிட்டால் மட்டுமே அதுபற்றி விவாதிக்கமுடியும். ஆயினும், அவர்கள், இன்னும் ஒரு வாரத்தில் குறிப்பிட்ட சில பெயர்களுடன் காங்கிரஸ் தலைமையை (சோனியா) மீண்டும் சந்திப்பார்கள் என நம்புகிறேன்.” என்றுள்ளார்.

Most Read