இந்தியா
Typography

இறைச்சிக்காக மாடுகளை விற்க விதித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மாடுகள், ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு கடந்த மாதம் 26ஆம் திகதி தடை விதித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் இது தொடர்பாக 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் டெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “யாருடைய உணவு பழக்கவழக்கத்தையும் கட்டுப்படுத்த நாங்கள் (மத்திய அரசு) ஒரு போதும் விரும்பியது இல்லை. மக்கள் விரும்பும் உணவை உண்ண தடை ஏதும் கிடையாது. ஆனால் அதே சமயம் பசுக்களை பாதுகாப்பதில் அரசுக்கு என்று அரசியலமைப்பு கோட்பாடுகள் உள்ளன.

பசுக்களை பாதுகாக்க நாம் ஒரு சில விஷயங்களில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த இரு விசயத்திலும் சமநிலையை நாம் கடைபிடிக்க வேண்டும். எனவே மத்திய அரசு இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய தயாராக இருக்கிறது.” என்றுள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஹர்ஷ்வர்தன் ஏற்கனவே அளித்த பேட்டியில், “மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு மாடுகளை விற்க விதித்த தடை குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் உயர் நீதிமன்றத் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இது குறித்து ஹர்ஷ்வர்தன் நேற்று கூறியதாவது, “மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்து இருக்கிறது. நாங்கள் அதுவரை காத்திருக்க போவதில்லை. முன்னதாகவே எங்கள் தரப்பு விளக்கத்தை தாக்கல் செய்வோம். இந்த உத்தரவால் யாரும் பாதிக்கக்கூடாது என்பதே எங்களின் எண்ணம். இது தொடர்பான அறிவிப்பை மறு ஆய்வு செய்ய இருப்பதாக ஏற்கனவே நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். இதன் மூலம் மக்களிடையே உள்ள சந்தேகம், தவறான கருத்துகள் நீங்கும் என எதிர்பார்க்கிறோம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்