இந்தியா
Typography

துக்ளக் 50 வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெரியார் நடத்திய பேரணி தொடர்பான தகவல் தவறானது. அவதூறு கிளப்பும் இந்தப் பேச்சிற்காக ரஜினி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும், இது தொடர்பில் சட்டரீதியான நடடிவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில். நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " 1971 ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த பேரணி குறித்து நான் துக்ளக் விழாவில் பேசியது சர்ச்சையாக உள்ளது. ஆனால் இல்லாத ஒன்றை நடக்காத ஒன்றை கற்பனையான விஷயத்தை நான் கூறவில்லை. நான் கேள்விப்பட்டது, அவுட்லுக் பத்திரிகையில் செய்தியாக வந்ததைத்தான் கூறினேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். இது தொடர்பில் நான் மன்னிப்பு கேட்பதற்கில்லை என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த நிலைப்பாட்டிற்கும், அவரது பேச்சுக்கும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தமது ஆதரவினை ட்விட்டர் பக்கத்தில் பதிவாகவும் இட்டுள்ளார். அவர் டுவிட்டரில் " 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் பேரணியில் ராமர் மற்றும் சீதையை கேவலமாக சித்தரித்து அணிவகுத்துச் சென்றது உண்மை, இதனை சோ துக்ளக் இதழில் பதிவிட்டுள்ளார். எனவே, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS