இந்தியா
Typography

காரைக்காலைச் சேர்ந்தவர் கலைமாமணி எஸ்.எம்.உமர் (95). இன்று அதிகாலை (திங்கள்கிழமை)அதிகாலை காலமானார்.

தமது 20-ம் வயதில் திரைத்துறையில் நுழைந்து, உதவி இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற முகங்களுடன் வலம் வந்து, சுமார் 600 இந்திய மொழிப் படங்களை வியட்நாம் மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டு, பழம்பெரும் நடிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எஸ்.எம்.உமர்.

இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி - சாதாசிவம் தம்பதியின் நெருங்கிய தோழர்களில் ஒருவர். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாகவும் எழுதியிருக்கிறார். சென்னையில் தியாகராயநகர் பனகல் பார்க் அருகில் இவர் நடத்திவரும் உமர் கயாம் உணவு விடுதி மிகவும் பிரபலம். வியட்நாம் தலைநகர் சைகோனில் ஒரு சைவ உணவகத்தை 1958 முதல் 1975 வரை நடத்திய அனுபவசாலி! காரைக்காலைச் சேர்ந்த உமர், மதமாச்சரியங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினருடனும் நெருக்கமாகப் பழகுபவர்.

எம்.கே.தியாகராஜபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதாசிவம், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., இந்திய முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது என்று பல பிரமுகர்களும் இவரின் நெருங்கிய நண்பர்கள். பிரபலங்களுடன் பழகிய இவருக்குச் சாமான்யர்களிடமும் நெருக்கமான உறவும் தொடர்பும் உண்டு என்பதுதான் சிறப்பு. காரைக்காலைச் சேர்ந்த உமர், இளம் வயதில் சென்னைக்குச் சென்று ஞானசௌந்தரி, லைலா மஜ்னு, அமரகவி, குடும்ப விளக்கு, ஜெனோவா போன்ற திரைப்படங்களின் தயாரிப்பில் பங்கேற்றவர்.

பிரெஞ்சு நாட்டு குடியுரிமை பெற்றுள்ள இவர், விட்நாமில் 25 ஆண்டுகள் தங்கியிருந்து, 600க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களை அந்த நாட்டு மொழியில் மாற்றம் (டப் செய்து) செய்து வெளியிட்டுள்ளார். திரைப்படத் துறையில் செய்த சாதனைக்காக, தமிழக அரசு 1997ல் இவருக்கு "கலைமாமணி" விருதும், 2010ம் ஆண்டில் புதுவை அரசு "கலைமாமணி" விருதும் வழங்கிக் கௌரவித்துள்ளன.

நாடகத்துறையில் தமது பங்களிப்பை வெளிப்படுத்தியதோடு, பத்திரிகைத் துறையில் நுழைந்து 1939-இல் இளம்பிறை, கதம்பம், குரல் மற்றும் உமர் கய்யாம் ஆகிய சிறு பத்திரிகைகளை நடத்தியுள்ளார். பட்டங்கள்: தமிழக அரசு 1998, புதுச்சேரி அரசு 2006-இல் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. சினிமாவில் கலைச்செல்வர் விருது 1993-இல், கலைச்சுடர் விருது 1995-இல் என 25-க்கும் மேற்பட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதுமை காரணமாக வீட்டிலேயே இருந்துவந்த அவர், இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் காலமானார். காரைக்காலில் இன்று பகல் 11.30 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்