இந்தியா
Typography

சனிக்கிழமை சவுதி அரேபியாவில் உள்ள பிரதான எண்ணெய் உற்பத்தி ஆலை ஒன்றின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் தொடுக்கப் பட்டதால் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து கால வரையறை இன்றி சில எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மூடப் பட்டன.

இதனால் சவுதியின் 50% வீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப் பட்டது.

சவுதியின் பிரதான எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவில் இதன் தாக்கத்தால் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்கள் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கலக்கத்தில் உள்ளனர். சவுதியில் ஏற்பட்டுள்ள இந்த அசம்பாவிதத்தால் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேசத்தில் பேரல் ஒன்றுக்கு 67 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லீட்டர் ஒன்றுக்கு ரூபாய் 5 வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே பொருளாதார மந்த நிலையால் ஆட்டோ மாபைல் துறை சரிந்துள்ள நிலையில் இவ்வாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன விற்பனை இன்னமும் பாதிக்கப் படுமோ என்கின்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. உலகிற்குத் தேவையான கச்சா எண்ணெயில் 10% வீதத்தை சவுதி அரேபியா வழங்கி வருகின்றது. தற்போது இதில் பாதியாகக் குறைந்து விட்டது. மேலும் எதிர்வரும் வாரங்களில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 70 டாலராக உயர வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது.

இதற்கு முன்பு 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் 1991 இல் வளைகுடா போர் நடைபெற்ற போது கச்சா எண்ணெய் விலை மிக உச்சத்தைத் தொட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இம்முறை கணிசமாக உயரக் கூடிய கச்சா எண்ணெய் விலை இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதன் தாக்கத்தால் இந்திய ரூபாய் மதிப்பு 68 காசுகள் சரிவடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS