இந்தியா
Typography

சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கும் வேட்பாளர்களை நியமித்திருந்தார் முன்னால் நடிகரும் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருபவருமான கமல்ஹாசன்.

அரசியல் களத்தில் இவர் குதித்த பின் பாஜக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளிடமும் ஏனைய கட்சிகளிடமும் இருந்து கடுமையான விமரிசனத்தை கமல் சந்தித்து வந்த போதும் நகர்ப்புற இளவயதினரை இவர் வெகுவாக ஈர்த்து வந்தார். அண்மையில் அரவக்குறிச்சி வேட்பாளரை ஆதரித்து கமல் பேசிய போது, 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் தெரிவித்ததுடன் தான் காந்தியின் மானசிகப் பேரன் என்பதால் அதற்கு நியாயம் கேட்க வந்துள்ளேன்' என்றும் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறவும் இந்துக்களை விமர்சிக்கவுமே இவ்வாறு ஒரு கருத்தைக் கமல் தெரிவித்துள்ளதாக பல எதிர் தரப்பினர் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். கமலைக் கைது செய்ய வேண்டும் என ஒரு சாரார் குரல் எழுப்பியுள்ளதுடன் அவர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப் பட்டுள்ளது. தமிழகத்திலோ கரூர் வடக்கு, மடிப்பாக்கம் மற்றும் அரவக்குறிச்சி போன்ற பகுதிகளில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கரூட் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராமகிருஷ்ணன் புகாரின் பேரில் கமல் மீது பேச்சாலோ, எழுத்தாலோ மத, இன, மொழி, சாதி சம்பந்தப் பட்ட விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்தது மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் செயற்பட்டது ஆகிய பிரிவிகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதுதவிர கமல் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடமும் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது. இவ்விடயங்கள் கமலின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்