இந்தியா
Typography

இனி வரும் சில நாட்களுக்கு சென்னை உட்பட வட மாவட்டங்களில் வெப்பக் காற்று வீசும் என தமிழ்நாட்டு வானிலை நிலையத்தைச் சேர்ந்த பிரதீப்ஜான் என்பவர் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் அண்மையில் உண்டான ஃபானி புயல் காற்றின் முழு ஈரப்பதனையும் இழுத்துச் சென்றதால் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இது தவிர கத்திரி வெயிலும் சென்னையை சுட்டெரிக்கின்றது.

ஆனால் அரிதாக வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டு மிதமான கோடை மழையும் சொற்பமாக அவ்வப்போது பெய்து வருகின்றது. இந்நிலையில் பிரதீப்ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இனிவரும் சில நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் வெப்பக் கதிர்கள் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் 14 பகுதிகளில் காலையில் கடும் வெப்பமும் மாலையில் பல இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதால் இவ்வருடம் தமிழகம் முழுவதிலும், சென்னையிலும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனியார் வானிலை அவதான நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை குறிப்பிடத்தக்க மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS