இந்தியா
Typography

ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் 14 மாவட்டங்களிலும் நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

நண்பகல் 12 மணி முதலே கடுமையான சோதனைகளுக்கு பின்னர் தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கப் பட்டனர். இம்முறை நீட் தேர்வில் கேட்கப் பட்ட கேள்விகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்

ஆதார்டு கார்டு இல்லாமல் வந்த மாணவர்கள் மற்றும் கால தாமதமாக வந்த மாணவர்கள் எவரும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப் படவில்லை. இந்தியாவில் ஃபானி புயலின் பாதிப்புக் காரணமாக ஒடிசாவில் மாத்திரம் நீட் தேர்வு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுதும் சுமார் 15.19 இலட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த நீட் தேர்வின் முடிவுகள் ஜுன் 5 ஆம் திகதி வெளியாகின்றன. மாணவர்கள் கருத்துப் படி இயற்பியல் வினாக்கள் தவிர்த்து ஏனைய கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப் பட்டதாகவும் மாநிலப் பாடத் திட்டத்தில் இருந்து குறைவான வினாக்கள் கேட்கப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கர்நாடகா மாநிலத்தில் ரயில் தாமதம் காரணமாக 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வட கர்நாடகாவில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ஹம்பி விரைவு ரயில் காலை 7 மணிக்கு பெங்களூர் செல்ல வேண்டிய சூழலில் 2.30 மணிக்கே அது சென்றடைந்துள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் 1.30 மணிக்கு முன்னதாக தேர்வு அறைக்குச் சென்றிருக்க வேண்டிய நிலையில் 1 நிமிடம் தாமதித்தால் கூட உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் குறித்த ரயில் 6 மணித்தியாலம் தாமதித்ததால் 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாத பரிதாபமான சூழல் ஏற்பட்டு விட்டது. இதையடுத்து டுவிட்டர் மூலம் இது குறித்து பல மாணவர்கள் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குப் புகார் அளித்துள்ளனர். மேலும் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவும் இது குறித்து பாரதப் பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு வருவேன் என்று உறுதியளித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்