இந்தியா
Typography

நாளை வெள்ளிக்கிழமை ஃபானி புயல் ஒடிசாவில் கரையைக் கடக்கவுள்ள நிலையில் ஒடிசாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளிலுள்ள சுமார் 10 இலட்சம் மக்கள் வெளியேற்றப் பட்டதுடன் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் பல ஆயிரக் கணக்கான மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர்.

புவனேஸ்வரிலுள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் எச்.ஆர்.பிஸ்வாஸ் கருத்துத் தெரிவிக்கையில் ஒடிசாவில் குறைந்தது 11 மாவட்டங்கள் இப்புயலால் பாதிக்கப் படும் என்றுள்ளார். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமென்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 20 செண்டி மீட்டர் மழைப் பொழிவு ஏற்படும் எனவும் மாலை 5.30 மணியளவில் புயல் கடக்கும் போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் எனவும் கடல் அலைகள் ஊருக்குள் நுழையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இப்புயலின் காரணமாக ஒடிசாவில் தாழ்வான பகுதிகளிலுள்ள இரு துறைமுகங்கள் மூடப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபானி புயல் ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தேசியப் பேரிடர் பாதுகாப்பு அமைப்பும் மக்களைப் பாதுகாப்பாக இருக்கும் படியும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
ஒடிசா கரையை அடைந்த பின் ஃபானி புயல் வங்கதேசத்தின் சிட்டாகொங்கை நோக்கி நகரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளியேற்றப் பட்டுள்ள 10 இலட்சம் மக்களும் சுமார் 850 இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்திய இராணுவத்தின் கடற்படையும் கடலோர காவல் படையும் தயார் நிலையில் உள்ளன.

தற்போது தேர்தல் காலம் என்பதால் அரசு துரிதமாகச் செயற்படுவத்ற்கான விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்