இந்தியா
Typography

அண்மையில் விண்ணில் உள்ள செய்மதி ஒன்றைக் குறி வைத்துத் தாக்கும் ஏவுகணைப் பரிசோதனையை உலகின் 4 ஆவது நாடாக இந்தியா மேற்கொண்டிருந்தது.

மிஷன் சக்தி என்ற இந்தப் பரிசோதனை காரணமாக விண்வெளியில் Space Debris எனப்படும் விண்வெளித் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய விண்வெளிக் குப்பை விண்ணில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதாவது ASAT என்ற இந்தியாவின் செய்மதியை குறி வைத்துத் தாக்கும் மிஷன் சக்தி என்ற ஏவுகணை செயற்திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 400 விண்குப்பைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இது அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் வரக்கூடிய சர்வதேசா விண்வெளி நிலையமான ISS இன் வீரர்களுக்குத் தான் இடையூறு என்றும் நாசா தலைமை அதிகாரி ஜிம் பிரிடென்ஸ்டைன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இவர் கருத்துத் தெரிவிக்கும் போது, 'இந்தப் பரிசோதனையால் ஏற்பட்ட பல துகள்களும் கண்டறியும் வகையில் பெரிய அளவில் இல்லை என்ற போதும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 10 cm இற்கும் அதிகமான துகள்கள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன. இதுவரை இவ்வாறான 60 துகள்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என்பதுடன் இதில் 24 துகள்கள் சர்வதேச நிலையத்தைத் தாண்டிச் சென்றுள்ளன. இது மிகவும் ஆபத்தான விடயம். இந்தியாவின் இச்செயலை ஏற்றுக் கொள்ள முடியாது!' என்றுள்ளார்.

இதுவரை அமெரிக்க இராணுவம் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் ஏனைய விண்கலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய 10 cm இற்கும் அதிகமான சுமார் 23 000 விண்வெளிக் குப்பைத் துகள்களை அடையாளம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மிஷன் சக்தி ஏவுகணைப் பரிசோதனை மூலம் உலகின் சூப்பர் ஸ்பேஸ் பவர் நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். மேலும் இப்பரிசோதனை விண்வெளியில் விண்வெளிக் குப்பைகள் ஏற்படாத விதத்தில் தாழ்ந்த ஒழுக்கில் நடத்தப் பட்டதாகவும் இந்தியா அறிவித்திருந்தது.

எனினும் உலகின் விண்வெளி ஆய்வு நிலையங்கள் விண்வெளியில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வரும் விண்வெளிக் குப்பைகளை அகற்றுவது தொடர்பில் ஆராய்ச்சிகளை செய்து வரும் நிலையில் இந்தியா இது போன்ற ஆராய்ச்சியை செய்திருப்பது நாசா மட்டுமன்றி உலகின் ஏனைய விண்வெளி ஆய்வு நிலையங்களது அதிருப்தியையும் சம்பாதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்