இந்தியா
Typography

சமீபத்தில் இந்திய அரசு விண்ணில் பூமியைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்களை இடைமறித்து அழிக்கும் ஆற்றல் கொண்ட மிஷன் சக்தி என்ற ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டிருந்தது.

இந்த ஏவுகணைப் பரிசோதனை குறித்துப் பல்வேறு தரப்புக்களில் இருந்து பல விமரிசனங்கள் எழுந்துள்ள நிலையில் மிஷன் சக்தி பரிசோதனை மூலம் விண்வெளியில் கழிவுகள் ஏற்படலாம் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார்.

இந்த மிஷன் சக்தி ஏவுகணைப் பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப் பட்டதாக மார்ச் 27 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்திருந்தார். இதன் மூலம் உலகில் செயற்கைக் கோள்களைத் தடுத்து அழிக்கும் ஏவுகணைத் தொழிநுட்பத்தைப் பெற்ற 4 ஆவது நாடாக இந்தியா மாறியுள்ளது. மேலும் இந்தியத் தரப்பில் விண்வெளியில் கழிவுகள் ஏற்படாத வண்ணம் தாழ்வான சுற்றுப் பாதையில் தான் இப்பரிசோதனையை இந்தியா மேற்கொண்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக 2007 இல் சீனா இது போன்ற சோதனையை நிகழ்த்திய போது சர்வதேச அளவில் அது கடுமையாக விமரிசிக்கப் பட்டது.

ஏனெனில் இதன் போது 865 Km உயரத்தில் செயலிழந்த வானிலை செயற்கைக் கோளை சீன ஏவுகணை அழித்த போது அது சுற்றுப்பாதையில் பெரும் கழிவுப் பொருளை விட்டுச் சென்றிருந்தது. இதேவேளை இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஏவுகணை சோதனையின் வெற்றி குறித்து தொலைக் காட்சியில் மக்களிடையே தோன்றி மோடி உரை நிகழ்த்தியிருப்பதானது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என இந்தியக் காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடியின் உரை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப் பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்