இந்தியா
Typography

செவ்வாய்க்கிழமை கர்நாடகாவில் தார்வாட் மாவட்டத்தின் குமரேஷ்வர் நகரில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டடம் ஒன்று எதிர்பாராத விதத்தில் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலர் சிக்கிக் கொண்டனர்.

மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை இந்த விபத்தில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் 5 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. தற்போது இப்பகுதியில் தீயணைப்பு வீரர்களும் போலிசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியதால் காயமடைந்த பொது மக்கள் அருகிலுள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இக்கட்டட இடிபாடுகளுக்குள் இன்னமும் 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. இடிந்து விழுந்த கட்டடமானது 5 மாடிகளைக் கொண்டது என்பதுடன் தரை தளம் மற்றும் முதல் மாடி கட்டட பணிகள் முடிந்த பின் அங்கு பல கடைகள் இயங்கி வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து ஏற்பட்ட போது இக்கட்டட வளாகத்தின் கடைகளில் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் இருந்துள்ளனர். மதியம் 4 மணியளவில் இக்கட்டடம் இடிந்து வீழ்ந்த போது சுமார் 100 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். ஆனால் விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும், மீட்புப் பணியாளர்களும் துரிதமாகச் செயற்பட்டதால் உடனடியாக பெருமளவு மக்கள் மீட்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விபத்தில் சிக்கியோரின் கதி குறித்தும், ஏன் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறித்தும் போலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS