இந்தியா
Typography

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக காலமாகி இருந்ததை அடுத்து புதிய முதல் மந்திரியை நியமிப்பதில் கடும் குழப்பம் ஏற்பட்டது.

காங்கிரஸ் தலைவர்கள் ஆளுனரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதால் 2 நாட்களாக கோவா அரசியலில் கடும் பதற்ற நிலை காணப் பட்டது.

மேலும் திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மறைந்த முதல் மந்திரி மனோகர் பாரிக்கரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பட்டு அவரது உடல் முழு அரச மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து கோவாவின் புதிய முதல் மந்திரியாக அம்மாநிலத்தின் சபா நாயகராக இருந்து வந்த பிரமோத் சாவந்த் என்பவர் அதிரடியாகத் தேர்வாக்கப் பட்டுள்ளார். மேலும் அவர் திங்கள் இரவு பதவியேற்கவும் உள்ளார். கோவா மாநிலத்துக்கு 2 துணை முதல்வர்கள் ஏற்கனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் முதல்வர் பதவிக்குத் தம்மை நியமிக்கக் கோரியிருந்த நிலையில் தான் பிரமோத் சாவந்த் இனை நியமிக்க முடிவு எடுக்கப் பட்டுள்ளது. 40 பேர் கொண்ட கோவா சட்ட சபையில் பாஜகவுக்கு 12 உறுப்பினர்களும், கோவா முன்னணியின் 3 பேர், எம் ஜி பி கட்சியின் 3 பேர் மற்றும் சுயேச்சைகள் 3 பேர் ஆகியோரின் ஆதரவுடன் 21 பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு பாஜக அங்கு ஆட்சி செய்து வருகின்றது.

மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு கோவாவில் 15 உறுப்பினர்களே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS