இந்தியா
Typography

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு வேறு மசூதிகளில் அண்மையில் நடத்தப் பட்ட மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 49 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலை அடுத்து இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் மாயமாகி இருப்பதாகவும் 3 இந்தியர்கள் பலியானதாகவும் கூடத் தகவல் வெளியாகி உள்ளது.

பலியான இந்தியர்களில் 30 வயதுடைய முகமது இம்ரான், பர்ஹஜ் அஹ்சன் என்ற இளைஞர்களும், அன்ஸி அலி என்ற 25 வயது யுவதியும் அடங்குகின்றனர். அன்ஸி அலி கேரளா மாநிலத்தையும், இளைஞர்கள் இருவரும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப் பட்டுள்ளனர். காணாமற் போயுள்ள இந்தியர்களைத் தேடும் பணி குறித்து நியூசிலாந்து அதிகாரிகளுடன் பேசி வருவதாக நியூசிலாந்துக்கான இந்தியத் தூதர் சஞ்சீவ் கோலி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் இத்தாக்குதலில் பாதிக்கப் பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் சஞ்சீவ் கோலி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் இலுள்ள அல்நூர் மசூதி மற்றும் லிண்டவுன் பகுதியிலுள்ள இன்னுமொரு மசூதி என இவ்விரு இடங்களில் மோசமான துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரெண்டன் டாரண்ட் என்பவர் கைது செய்யப் பட்டு சனிக்கிழமை கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டுள்ளார்.

மேலும் குற்றவாளிகளை உடனே கண்டு பிடித்து தக்க தண்டனை அளிக்கப் படும் என நியூசிலாந்து அரசு உறுதியளித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS