இந்தியா
Typography

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்ற இளைஞனை 4 நாட்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து குறித்த இளைஞனை சிபிசிஐடி போலிசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை இவ்விவகாரம் தொடர்பான மனு விசாரணைக்கு வந்த போது பாதுகாப்புக் காரணங்களுக்காக உளவுத் துறையின் எச்சரிக்கையை அடுத்து நேரில் ஆஜர் படுத்தாத போலிசார் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருநாவுக்கரசிடம் விசாரணை நடத்தினர். இந்த இளைஞனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலிசார் 15 நாட்கள் கோரியிருந்த நிலையில் நீதிமன்றம் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்துள்ளது.

இதேவேளை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப் பட்டவர்கள், பொது மக்கள் மற்றும் விபரமறிந்தவர்கள் என யார் வேண்டுமானாலும் தாராளமாக முன்வந்து புகார் அளிக்கலாம் எனவும் அவர்களது விபரம் ரகசியம் காக்கப் படும் எனவும் சிபிசிஐடி போலிசார் அறிவித்தல் விடுத்துள்ளனர். இந்தப் பாலியல் குற்ற வழக்கில் திருநாவுக்கரசுடன் சேர்த்து சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய இளைஞர்களும் சமூக வலைத் தளங்கள் மூலம் பெண்களை மடக்கி அவர்களை இரகசியமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரப் படுத்தி அதனை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் நகை போன்றவற்றைப் பறித்து மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் நால்வரும் தற்போது கைது செய்யப் பட்டுள்ளனர்.

இக்கும்பல் கடந்த 6 ஆண்டுகளில் பொள்ளாச்சியில் மாத்திரம் 60 இற்கும் மேற்பட்ட பெண்களிடம் இவ்வாறு குற்றம் புரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் அரச மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புக்களைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. இவர்களைப் போராட்டத்துக்குத் தூண்டியதாக மாணவர் அமைப்புக்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரை எஸ் பி உட்பட போலிசார் அடித்து வேனில் ஏற்றிச் சென்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

எனினும் கைது செய்து வேனில் ஏற்றிய மாணவர்களை போலிசார் சற்று நேரத்தில் விடுவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். இப்போராட்டம் 1 மணி நேரம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்