இந்தியா
Typography

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் புதிய கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது.

இதற்கான பட்டியலை தேர்தல் கமிஷன் தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளமைக்கு நடிகர் கமல ஹாசன் தனது மகிழ்ச்சியையும், நன்றிகளையும் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியையும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது கட்சியின் டார்ச் லைட் சின்னத்தை அறிமுகம் செய்து வைத்து நடிகர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ல தனது கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

இதன் போது அவர் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும் நல்லவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்ற அடிப்படையில் எமது மக்களுடனான கூட்டணி மிகப் பலமாகவே உள்ளது என்றும் உறுதிபட தெரிவித்தார். மேலும் மனசாட்சிக்கு விரோதமின்றி தமது தேர்தல் அறிக்கை புத்தகமாக விரைவாகத் தயாராகிக் கொண்டு இருப்பதாகவும் இதனை விரைவில் மக்களிடையே பகிர்ந்து கொள்வோம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இனிவரும் 5 நாட்களிலும் கிடைக்கப் பெற்றுள்ள 1137 மனுவில் இருந்து நேர்க்காணல் நடைபெறும் என்றும் இதன்போது தாம் தேர்வு செய்யும் வேட்பாளர்களை வைத்துக் கொண்டு யார் யார் எங்கெங்கே போட்டியிடுவர் போன்ற தகவல்கள் வெளியிடப் படும் என்றும் கமல் குறிப்பிட்டார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்கள் இன்னும் விடுவிக்கப் படவில்லையே என்று கேள்வி எழுப்பப் பட்ட போது சட்டம் வேறு கருணை வேறு என்றும் கருணை அனைவருக்கும் பொதுவானது என்றும் இந்த 7 பேரைத் தவிர நாட்டிலுள்ள 7 1/2 கோடி பேரின் விடுதலை பற்றியும் பேச வேண்டும் என்பதும் எமது ஆசை என கமல் தெரிவித்தார்.

பூரண மது விலக்கு சாத்தியமா என்று கேள்வி எழுப்பப் பட்டதற்கு, வரலாறே அதற்குச் சான்று என்றும் படிப்படியாகத் தான் அந்த இலக்கை நோக்கிப் போக முடியும் என்றும் தெரிவித்த கமல் நடிகர் ரஜினி காந்த் தனது ஆதரவை மக்கள் நீதி மய்யத்துக்கு வழங்குவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார். இதுதவிர விரைவில் எந்தத் தொகுதியில் தான் நேரடியாகப் போட்டியிடப் போகின்றேன் என்பதை அறிவிப்பேன் எனவும் கமலஹாசன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்