இந்தியா
Typography

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பெப்ரவரி 26 ஆம் திகதி 1பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாமின் நிலைகள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது.

இதன்போது அபிநந்தன் என்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானியின் மிக் ரக போர் விமானம் பாகிஸ்தான் இராணுவத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப் பட்டதுடன் பாரசூட் மூலம் உயிர் பிழைத்த அவரை பாகிஸ்தான் இராணுவம் கைதும் செய்தது.

அதன் பின் சர்வதேச அழுத்தம் மற்றும் ஐ.நா சபை இந்தியாவின் நெருக்கடிகள் காரணமாக 3 நாட்கள் கழித்து அபிநந்தனை வெள்ளி இரவு வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் கையளித்தனர். அபிநந்தனுக்கு கண், முகம் மற்றும் கைகளில் காயங்கள் உள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை டெல்லி இராணுவ மருத்துவ மனையில் தற்போது அளிக்கப் பட்டு வருகின்றது. இவரை மருத்துவ மனைக்கு நேரில் சென்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஏர் மார்ஷல் பிரேந்தர் சிங்கும் நலம் விசாரித்தனர்.

இதேவேளை தான் பாகிஸ்தான் பிடியில் இருந்த போது உடல் ரீதியாகத் துன்புறுத்தப் படாத போதும், மனரீதியாகப் பல அழுத்தங்களைச் சந்தித்ததாக அபிநந்தன் கூறியிருப்பதாக ஏஎன்ஐ என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை தம்மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதை ஜெய்ஸ் இ முகமது என்ற புல்வாமா தாக்குதலை நடத்திய தீவிரவாத இயக்கம் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் இளைய சகோதரர் மவுலானா அமர் பெஷாவரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய போதே இத்தகவலைத் தெரிவித்துள்ளார். இவர் பேசிய போது தமது இயக்கத்தின் தலைமைச் செயலகம் மீது தாக்குதல் நடத்தப் படவில்லை என்றும் ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையத்தின் மீது இந்தியா குண்டுகள் வீசியது உண்மை தான் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புல்வாமா தாக்குதலைத் திட்டமிட்ட மவுலானா மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் மசூத் அசார் பாகிஸ்தானில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS