இந்தியா
Typography

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மண்ணில் பாலகோட் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை திடீர்த் தாக்குதல் நடத்தி 350 தீவிரவாதிகளைக் கொன்று விட்டதாக அறிவித்தது.

முன்னதாக பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தினை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த விமானத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் காயங்களுடன் உயிருடன் சிக்கியிருந்தார். இவரை பாகிஸ்தான் இராணுவம் கண்ணியமாக நடத்தியதாகவும் அபிநந்தன் நேரில் தோன்றி உரையாடுவதுமான வீடியோக்கள் யூ டியூப்பில் வெளி வந்தன. இந்தியா பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து அதைத் தணிக்கும் விதத்தில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகள் அறிக்கை வெளியிட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் பேசிய போது அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் நாளை மார்ச் முதலாம் திகதி விடுவிக்கப் படுவார் என்று அறிவித்துள்ளார். இம்ரான் கானின் இந்த அறிவிப்பை சர்வதேசமும் இந்திய அரசும் வரவேற்றுள்ளன.

இம்ரான் கானின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய இந்திய முப்படைத் தலைவர், இந்திய இராணுவம் எந்த சவாலையும் எதிர் கொள்ள முழு அளவில் தயாராக இருப்பதாகவும் விமானத் தாக்குதல்கள் தொடர்பில் பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை முன்னர் வழங்கி வந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் தொடர்பாக அந்நாடு யூடியூப்பில் பதிவேற்றியுள்ள வீடியோக்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு அபிநந்தன் தொடர்பிலான வீடியோக்களை நீக்குமாறு யூடியூப் நிறுவனத்துக்குக் கோரிக்கையும் விடுத்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்