இந்தியா
Typography

புகழ் பெற்ற கன்னட நடிகரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான அம்பரீஷ்(66) நேற்று பெங்களுருவில் காலமானார். மாரடைப்பில் காலமான அவருக்கு கன்னட திரைப்பட உலகினரும், தமிழ்த் திரைப்பட உலகினரும் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

« அவர் மறைவு கன்னட திரை உலகிற்கு மட்டுமல்ல, இந்தியத் திரை உலகிற்கே மாபெரும் இழப்பாகும்» என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

1952ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள தொட்டரசினகெரே கிராமத்தில் பிறந்தவர் அம்பரீஷ். அவரின் இயற்பெயர் மளவாலி ஹச்சே கவுடா அமர்நாத். படத்திற்காக வைத்த பெயர் தான் அம்பரீஷ். காலப்போக்கில் அதுவே அவரின் நிரந்தர பெயராகிவிட்டது. அவர் 1972ம் ஆண்டு வெளியான தேசிய விருது பெற்ற நாகரஹாவு படம் மூலம் நடிகர் ஆனார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நல்லுறவை பேணிக் காத்தவர் அம்பரீஷ். இயக்குனர் புட்டண்ணாவின் நகராஜாவு என்ற கன்னட திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தன் கலை உலக வாழ்க்கையை துவக்கிய அம்பரீஷ், அதன் பிறகு வில்லன் வேடங்களில் நடித்து 1980- களில் கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர் பெருமக்களின் பேராதரவைப் பெற்று பிரபலமானார் .

கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 230-க்கும் மேலான படங்களில் நடித்து சாதனை புரிந்து மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.

2013ம் ஆண்டு தார்வாட் பல்கலைக்கழகம் அம்பரீஷுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இது தவிர அவர் தனது சிறப்பான நடிப்புத் திறமைக்காக மாநில அரசின் விருதுகள் மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் பல பெற்றுள்ளார். அம்பரீஷின் மனைவி சுமலதா பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அரசியல் பயணம்

1994ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு அவர் ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். 1998ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் சித்தராமையா முதல்வராக இருந்தபோது அம்பரீஷ் கர்நாடக மாநில வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். அவர் 2013ம் ஆண்டு மே மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் வரை அந்த பதவியில் இருந்தார். பின்னர் அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். 14வது லோக்சபாவில் அவர் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். காவிரி விவகாரம் தொடர்பாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

பிரபலங்கள் அஞ்சலி

அவருடைய மறைவைக் கேள்விப்பட்டு நேரில் சென்று பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருபவர்களில் பல தமிழ்த் திரையுலக பிரபலங்களும் அடக்கம். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், அவரது பூதவுடலை பார்த்ததும், கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்