இந்தியா
Typography

அரசுக்கு எதிராக மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமான காட்சிகள் இருப்பதால், ‘சர்கார்’ திரைப்பட குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தேர்தல் பணிக்கான பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று திருப்போரூரில் நடைபெற்றது. கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.

பிறகு, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சி.வி.சண்முகம் கூறியதாவது, “விஜய் நடித்து வெளிவந்த சர்கார் திரைப்படத்தில் 3 மணி நேரத்தில் முதல்வர் ஆவது போன்று காட்சி அமைத்துள்ளார்கள். யாருடைய கதையையோ திருடி படத்தை தயாரித்தவர்கள் அரசை அவமதிப்பது கண்டிக்கத்தக்கது. அரசை விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே வன்முறையை தூண்டும் செயலாக இது அமைந்துள்ளது. யாருடைய தூண்டுதலின் பேரிலோ இதுபோன்ற காட்சிகளை அமைத்துள்ளனர். சட்டத்துறை அமைச்சர் என்பதால் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மீதும், அதில் நடித்துள்ள நடிகர் விஜய் மீதும், திரையிட்ட திரை அரங்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS