இந்தியா
Typography

அண்மையில் அமிர்தசரஸில் தசரா விழாவின் இறுதி நாளான ராவண வதம் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 61 பேர் வரை பலியாகி உள்ள நிலையில் இந்த விபத்து தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த நிகழ்ச்சி நடத்த எந்த அனுமதியும் வழங்கப் படவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கவே இல்லை என்றும் அமிர்தசரஸ் நகராட்சி ஆணைய மேயர் சொனாலி கிரி உறுதிப் படுத்தியுள்ளார்.

ஆனால் இதனையும் மீறி குறித்த தசரா விழாவுக்குப் பாதுகாப்பு வழங்க தனது அலுவலகம் அனுமதி அளித்ததாக இணை ஆணையர் அம்ரிக் சிங் பவார் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பில் தெளிவான பதிலை வழங்க அமிர்தசரஸ் காவல் துறையினர் தவிர்த்து வருகின்றனர். உண்மையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தீயணைப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றின் அனுமதியையும் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு ஏக்கருக்கும் குறைவான பகுதியான தோபி காட்டில் 20 000 மக்களுக்கு இடமளிக்கப் பட்டும் உள்ளே நுழையவும் வெளியே வரவும் ஒரே கேட் மாத்திரம் அளிக்கப் பட்டும் இருந்தது. ரயில்வே பாதைக்கு எதிராக மக்களுக்கு எல் இ டி திரையும் பொருத்தப் பட்டிருந்தது. இந்நிகழ்வை ரயில் தண்டவாளத்தில் இருந்து பொது மக்கள் பார்த்துக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பில் ரயில் ஓட்டுனர் விளக்கம் அளித்துள்ளார்.

அவரின் கூற்றுப் படி ரயில் தண்டவாளப் பகுதியில் ஏராளமானவர்கள் நின்றிருந்ததாகவும் இதனைப் பார்த்ததும் அவசர பிரேக்கை இயக்கி வேகமாக ஹாரனும் அடித்ததாகவும் தெரிவித்தார். எனினும் சிலர் அடிபட்டதைப் பாத்த அங்கிருந்தவர்கள் ரயில் மீது கற்களை வீசித் தாக்கியதால் பயணிகளைப் பாதுகாக்க ரயிலைத் தொடர்ந்து இயக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்