இந்தியா
Typography

இந்தியாவின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த முயன்றால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மன் கீ பாத் (மனதில் குரல்) என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவர் பேசியதாவது:-

“முப்படையினர் மீது பெருமிதம் கொள்ளாத இந்தியர் யாராவது இருக்க முடியுமா? நேற்று(அதாவது நேற்று முன்தினம்) இந்தியாவின் 125 கோடி மக்களும், வீரத்தின் வெற்றி விழாவை கொண்டாடினார்கள். 2016-ம் ஆண்டில் நடந்த துல்லிய தாக்குதல் நினைவு கூரப்பட்டது. நமது தேசத்தின் மீது பயங்கரவாத போர்வையில் கோரமாக நடத்தப்பட்ட மறைமுக போருக்கு நமது ராணுவத்தினர் பலமான பதிலடி கொடுத்தனர்.

நாட்டின் குடிமக்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு நமது சக்தி என்ன? என்பதை தெரியப்படுத்தும் வகையில் நாட்டில் பல்வேறு இடங்களில் ராணுவத்தினர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ராணுவத்தினர் தங்கள் உயிரை பணயம் வைத்து நாட்டு மக்களை பாதுகாத்து வருகின்றனர்.

இந்தியாவின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்கினாலும் அவர்களுக்கு நமது ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள்.(பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் மோடி இவ்வாறு கூறினார்) நாம் அமைதியில் நம்பிக்கை கொண்டவர்கள், இதற்கு மேலும் உந்துதல் அளிக்க உறுதி பூண்டிருக்கிறோம்.

ஆனால் அதே நேரத்தில் கண்ணியத்தை காவு கொடுத்து தேசத்தின் இறையாண்மையை விலையாக கொடுப்பது என்பது எந்நாளும் சாத்தியமில்லை. பாரதம் என்றுமே அமைதியை நிலைநாட்ட தன் உறுதியை அளித்திருக்கிறது.

அர்ப்பணிப்பு உணர்வோடு இருந்து வந்திருக்கிறது. 20-ம் நூற்றாண்டில் இரு உலகப்போர்களிலும் நமது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அமைதியின் பொருட்டு தங்களின் மிகப்பெரிய தியாகத்தை புரிந்தார்கள்.

பல ஆண்டுகளாக நமது வீரம் நிறைந்த ராணுவத்தினர் உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கியமான பங்களிப்பை அளித்து வந்திருக்கின்றனர். அக்டோபர் மாதம் 8-ந்தேதி விமானப்படை நாளை கொண்டாடுகிறோம்.

1932-ம் ஆண்டில் 6 விமானிகள் மற்றும் 19 விமானப்படை வீரர்களுடன் ஒரு சிறிய அளவில் தொடங்கப்பட்ட நமது விமானப்படை இன்று 21-ம் நூற்றாண்டின் மிக அதிக சாகசமும், சக்தியும் உடைய விமானப்படைகளில் இடம் பிடித்திருக்கிறது.

துப்புரவு செய்தால் சுதந்திரம் கிடைக்கும் என்றார் மகாத்மா காந்தி. இது எப்படி நடக்கும் என்று அவருக்கு தெரியாமலேயே கூட இருந்திருக்கலாம். ஆனால் இது நடந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

செப்டம்பர் மாதம் 15-ந்தேதி ‘தூய்மையே சேவை’ என்ற ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. கோடிக்கணக்கானோர் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். டெல்லியின் அம்பேத்கர் பள்ளிக்குழந்தைகளோடு தூய்மைப்பணியில் சேவை செய்ய எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

‘தூய்மையான பாரதம் இயக்கம்’ நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் அனைத்திலும் ஒரு வெற்றிக் கதையாகி விட்டது. இதைப்பற்றி அனைவரும் பேசி வருகின்றனர். இந்த முறை இந்தியா, வரலாறு காணாத வகையில் உலகத்தின் மிகப்பெரிய தூய்மை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

‘மகாத்மா காந்தி சர்வதேச தூய்மை மாநாடு’ என்ற பெயரில் நடைபெற உள்ள மாநாட்டில் சுகாதார அமைச்சர்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுனர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை தொடர்பான தங்களின் பரிசோதனைகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மகாத்மா காந்தி சர்வதேச தூய்மை மாநாட்டின் நிறைவு விழா நாளை(செவ்வாய்க்கிழமை) காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் விழாவின் தொடக்கத்தை ஒட்டி நடைபெறும்.

அக்டோபர் 31-ந்தேதி சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் அன்று ஒற்றுமைக்கான ஓட்டம், இந்தியாவின் ஒவ்வொரு சிறிய நகரிலும், கிராமங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நமது கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்களில் இந்த ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்