இந்தியா
Typography

“பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம், சகிப்புத்தன்மை நமது கொள்கையாகும்.” என்று நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நிறைவு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார். 

“ஒரே கலாச்சாரம், மொழியைக் கொண்டுள்ள மக்கள் வாழும் புவிப்பகுதியே தேசம் ஆகும். ஒரு சிலரை தனிமைப்படுத்திவிட்டு நாம் பன்முகத்தன்மையை பார்க்க முடியாது. பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும். சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது தேசியவாதத்தை சீர்குலைப்பதாக உள்ளது. தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவையாகும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி மேலும் தெரிவித்துள்ளதாவது, “கிபி 6ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியா என்ற நாடு உருவாகத் தொடங்கியது. கிமு 4ஆம் நூற்றபாண்டில் சந்திரகுப்த மவுரியர் இந்திய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். பல்வேறு சாம்ராஜ்யங்களுக்குப் பின் இந்தியா பல பிரிவுகளாக உடைந்து துண்டானது. பின்னர் முகலாயர் படையெடுப்பும் கிழக்கு இந்திய கம்பெனியின் ஆட்சியும் ஏற்பட்டது. 2500 ஆண்டுகளாக பல ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் இந்தியாவின் 5000 ஆண்டு கலாச்சாரம் சிதையவில்லை. மத அடிப்படையில் தேசத்தை வரையறுக்க முயல்வது நம் அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும். வெறுப்பும், சகிப்பின்மையும் நாட்டின் அடையாளத்தை பலவீனப்படுத்திவிடும்.

இந்து, முஸ்லிம், சீக்கியம் உள்பட பல நம்பிக்கைகளின் சங்கமத்தில் தான் தேசியவாதம் உருப்பெறும். பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்ததன் மூலம் தான் நம் நாட்டின் அடையாளம் வலுப்பெற்றுது. பல்வேறு நம்பிக்கைகள் ஒருங்கிணைந்த தொகுப்புதான் இந்தியா.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்