இந்தியா
Typography

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்று வரும் இராணுவக் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று வியாழக்கிழமை காலை தமிழகம் வந்தார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற கூடாது என்று போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்தும் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் 11ஆம் தேதி (நேற்று) முதல் 14ஆம் தேதி வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் இராணுவ கண்காட்சி நடக்கிறது.

இதற்காக சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.480 கோடி செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிஹாப்டர் மூலம் திருவிடந்தை சென்றடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த பிரமர் மோடிக்கு திமுக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கருப்பு கொடி காட்டி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேலும் கொடி கம்பங்கள், கருப்பு பலூன்கள் வானில் பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மோடி வருகைக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராடிய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன், ராம், வெற்றிமாறன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்போது காவிரி வாரியம் அமைக்காத மோடியே திரும்பி போ என்று இயக்குநர்கள் முழக்கமிட்டனர். சென்னை விமான நிலையத்தை கருப்பு கொடியுடன் முற்றுகையிட்ட சீமான் கைது செய்யப்பட்டார். மேலும் பழ.நெடுமாறன், வேல்முருகன் உள்ளிடோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டிய எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு அருகே இளைஞர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் சீத்தோடையை சேர்ந்த தர்மலிங்கம் (24) தீக்குளித்து உயிரிழந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்