இந்தியா
Typography

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவசாகம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பெப்ரவரி 16ஆந்தேதி தீர்ப்பு வழங்கியது.

தனது தீர்ப்பில் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த உச்ச நீதிமன்றம், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற செயல்திட்டம் ஒன்றை 6 வார காலத்துக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்காக எந்த சூழ்நிலையிலும், எந்த விதமான கால நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.

நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்ததால், இந்த இரு அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிபிட்டுள்ளது என்பது பெரும்பாலானோரின் கருத்து.

இதன் அடிப்படையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.

ஆனால் கர்நாடக அரசு, செயல்திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு எங்கும் கூறவில்லை என்று கூறிவருகிறது. கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், மத்திய அரசும் இதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தது. இதற்கிடையே உச்சநீதிமன்றம் விதித்திருந்த 6 வார கால கெடு கடந்த வியாழக்கிழமையுடன் முடிந்தது.

உச்சநீதிமன்றம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளபடி செயல்திட்டத்தை ஏற்படுத்த தவறினால், மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். எனவே மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாய நிலையில் இருந்தது. இதனால் இந்த பிரச்சினை குறித்து சட்ட அமைச்சகத்திடம், மத்திய அரசு கருத்து கேட்டது. அதன்படி சட்ட அமைச்சகமும் சில கருத்துகளை தெரிவித்தது.

எனவே, ‘செயல்திட்டம்’ என்றால் என்ன? என்பது பற்றி மாறுபட்ட கருத்துகள் ஏற்பட்டு இருப்பதால், அது குறித்து விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கு மத்திய அரசின் தலைமை வக்கீல் கே.கே.வேணுகோபால் அனுமதி அளித்து உள்ளார். இதைத்தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் விளக்கம் கோரி மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றில் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS