இந்தியா
Typography

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று தமிழக அரசை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘காவிரி மேலாண்மை வாரியத்தை சுப்ரீம் கோர்ட்டு அறிவித்த 6 வார காலக்கெடுவிற்குள் அமைக்காமல், மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு மாபெரும் துரோகம் இழைத்துவிட்டது. அந்த மத்திய பா.ஜ.க. அரசின் கண் அசைவுக்கு ஏற்ப, பாராளுமன்றத்தில் ஒரு “கண்ணாமூச்சி” கண்துடைப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி, இங்குள்ள அ.தி.மு.க. அரசும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், தமிழ்நாட்டிற்கு இரட்டிப்புத் துரோகம் செய்துவிட்டது.

பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதித்து, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஒரு ஆலோசனை கூட நடத்தப்படவில்லை.

தமிழ்நாட்டு முதல்-அமைச்சருக்கோ, அமைச்சரவையைக் கூட்டி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறிவிட்ட மத்திய அரசைக் கண்டித்து ஒரு தீர்மானத்தைக்கூட நிறைவேற்றத் திராணியில்லை.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிராக மத்திய நீர்வளத்துறை மந்திரியும், மத்திய நீர்வளத்துறைச் செயலாளரும் பேசிய நேரத்திலேயே அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தால், இந்நேரம் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைந்திருக்கும்.

ஆனால், முதல் முறையாக அல்ல, 2 முறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் இணை பிரியாத கூட்டாளிகளாக செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கு துரோகத்தை இழைத்து இருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போதாவது தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்டி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறியிருக்கின்ற மத்திய அரசையும், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து வாயே திறக்காத பிரதமரையும் கண்டித்து கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளையில், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், தமிழ்நாட்டு உரிமைகளை காவு கொடுத்துவிட்டு, பா.ஜ.க.விற்கு கர்நாடக தேர்தல் லாபத்தை ஏற்படுத்தி, எல்லா வகையிலும் உதவுவதற்காக மட்டும் அதிக நேரம் உழைப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.’ என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS