இந்தியா
Typography

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்தது தொடர்பாக, நாளை அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி அடுத்தக்கட்ட போராட்டம் முடிவு செய்யப்படும் என்று திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

முதன்மை செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ேக.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், கனிமொழி, டி.ஆர்.பாலு மற்றும் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைமை நிலைய செயலாளர்கள், அணி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: }மத்திய பாஜக அரசு நியூட்ரினோ திட்டத்துக்கு அளித்திருக்கின்ற சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து, தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்க வேண்டிய அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டும்.

* மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அச்சத்தையும், ஆபத்தையும் ஏற்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

* 2.4.2018 முதல் நடைபெறும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க.வினர் தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெறும் உள்நோக்கத்துடன், தி.மு.க.வினரின் வேட்பு மனுக்களை நிராகரிப்பது, வெற்றி பெற்றவர்கள் என்று அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை தன்னிச்சையாக ஒட்டி விட்டு, தேர்தல் அதிகாரிகள் தலைமறைவாகி விடுவது போன்ற கீழ்த்தரமான
மோசடிகளில் கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரிகளே ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

* கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து விட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் கூட்டுறவு தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்த வேண்டும்.

* மருத்துவக் கல்லூரி மேல்படிப்பிற்கான 8,000 இடங்களில் 2,100 இடங்கள் பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்றாலும், 165 இடங்கள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மேல்படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது. எனவே, பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

*  கர்நாடக மாநிலத் தேர்தல் எனும் குறுகிய அரசியல் லாபத்திற்காக, மத்திய பாஜக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வேண்டுமென்றே தாமதம் செய்து காலம் கழித்து விட்டு, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் பற்றி விளக்கம் கேட்கப் போகிறோம் என்று முடிவெடுத்திருப்பது, வஞ்சகத்தின் வெளிப்பாடாகவும் கபட நாடகமாகவும் அமைந்துள்ளது.

* 6 வார காலக் கெடுவிற்குள் மத்திய அரசுக்கு தீவிர அழுத்தம் கொடுக்க தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற யோசனையை அ.தி.மு.க. அரசு எள்ளி நகையாடியது. தமிழகத்தின் உரிமைகளைக் காவு கொடுத்து  தமிழர் நலனைக் காட்டிக் கொடுத்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கும், தமிழகத்தை நேரடியாக வஞ்சித்துப் பச்சைத் துரோகம் செய்திருக்கும் மத்திய அரசுக்கும் கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது.

* ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. அரசு தமிழர் நலனுக்காக பாடுபடவில்லை என்ற நிலையில், பொறுப்புள்ள எதிர்கட்சியாக இருக்கும் திமுக தமிழகத்தின் ஒற்றுமையை மத்திய அரசுக்கு வெளிப்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கும், அதற்கு அழுத்தம் கொடுக்காமல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கும் எதிராக அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு போராடவே திமுக விரும்புகிறது.
எனவே, அனைத்துக் கட்சிகளுடன் கலந்து பேசுவதற்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, அதில் பெறப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக முடிவு எடுக்க எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டம் அதிகாரமளிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  பின்னர் பேட்டி  அளிக்கும் போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத பிரதமர் மோடி வருகிற 15ம் தேதி சென்னை வரும்போது, திமுக சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS