இந்தியா
Typography

தேனி மாவட்டத்தில் போடி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் Tracking எனும் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற சுமார் 40 கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அங்கு ஏற்பட்ட மோசமான காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர்.

கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் தேனி மாவட்டத்தின் போடிக்கு அருகேயுள்ள போடி, பெரிய குளம் மற்றும் குரங்கணி காட்டுப் பகுதியில் காட்டுத் தீ மோசமாகப் பரவி வருகின்றது.

இதையடுத்து தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளன. மலையின் பள்ளத்தாக்கில் மாணவர்கள் சிக்கிக் கொண்டதால் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளது. எனினும் உள்ளூரைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் கிராம மக்கள் அளித்த தகவல் படி மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் இதுவரை 17 பேரை இலேசான காயங்களுடன் மீட்டுள்ளனர்.

மீட்புப் படையினரின் தகவல் படி கடுமையான தீக்காயங்களுக்குப் பலர் ஆளாகி இருப்பதாகவும் இதில் 5 பேர் வரை இறந்து விட்டதாகவும் தெரிய வருகின்றது. இரவு நேரம் காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ள போதும் தற்போது இந்திய இராணுவத்தைச் சேர்ந்த அனர்த்த கால கமாண்டோ வீரர்களும் பல ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப் பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகளின் உயிரைக் கருத்தில் இரவோடு இரவாக மீட்புப் பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

உயிரிழப்புக் குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் மீட்கப் பட்ட மாணவிகள் பலரின் பெயர் விபரம் வெளியிடப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்