வினோதம்
Typography

நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் விண்வெளிப் பயணத் திட்டங்களை பாதிக்கக் கூடிய சுமார் நூறு மில்லியன் குப்பைகள் (Space Junk) நமது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் வலம் வருவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகச்சிறிய குப்பைகளே அதிக வேகத்தில் பயணிக்கும் போது பாரிய சேதத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை நிலவுகையில் 10 cm இற்கும் அதிகமான அளவுடைய சுமார் 27 000 விண் குப்பைகள் சராசரியாக 28 000 km/h என்ற வேகத்தில் பூமியைச் சுற்றி பயணிப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது.

இந்த விண்வெளிக் குப்பைகளை நாசா விண்வெளி ஆய்வு மையமும் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து கண்காணிப்பு செய்துள்ளன. மேலும் இந்த விண்வெளிக் குப்பைகள் விண்வெளியில் தங்கி வேலை செய்யக் கூடிய வருங்கால சந்ததிக்கும் முக்கிய அச்சுறுத்தலாக் விளங்குவதாகக் கூறப்படுகின்றது. 'Adrift' என்ற விஞ்ஞான மற்றும் கலை கண்காட்சியில் விண்வெளி சேதங்கள் (Space debris) அல்லது விண்வெளிக் குப்பைகள் (Space Junk) ஆகியவற்றால் ஏற்படக் கூடிய ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. லண்டனிலுள்ள றோயல் விண்வெளி ஆய்வு சமூகத்தால் இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தை விட 20 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் உலோகம் அல்லது பிளாஸ்டிக்கிலான விண்வெளிக் குப்பைகள் மனித இனம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சுற்றுச் சூழல் சவால் எனப்படுகின்றது. இந்தக் குப்பைகளைத் துப்பரவு செய்யும் பணி அவ்வளவு இலகுவான ஒன்று அல்ல என்றும் பல பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள், சட்டத்தரணிகள் மற்றும் பொருளியலாளர்களின் உதவியுடன் வருடக் கணக்கில் பணியாற்ற வேண்டிய ஒன்று எனவும் கூடத் தெரிவிக்கப் பட்டுள்ளது. நமது பூமிக்கு மேலே உள்ள மிகப் பெரிய விண்வெளிக் குப்பை இரு டபுள் டெக்கர் பஸ் வண்டியின் அளவுடைய பூமியைக் கண்காணிக்கும் என்விசாட் என்ற 2002 ஆம் ஆண்டு ஏவப் பட்ட ESA (ஐரோப்பிய விண்வெளிக் கழகம்) இன் செய்மதி ஆகும். இது தற்போது செயலிழந்த நிலையில் இன்னமும் பூமியில் வந்து மோதாமல் மிகப் பெரிய குப்பையாக பூமிக்கு மேலே 225 Km உயரத்தில் சுற்றி வருகின்றது.

இதை அடுத்து 2009 இல் அமெரிக்க வர்த்தக செய்மதி ஒன்றும் ரஷ்யாவின் கொஸ்மோ என்ற செய்மதியும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட சுமார் 2000 சேதமடைந்த பாகங்களும் பூமிக்கு மேலே குப்பையாக சுற்றி வருவது கண்காணிக்கப் பட்டுள்ளது. 1971 இல் பிரிட்டிஷ் ராக்கெட்டால் ஏவப்பட்ட பிரிட்டனின் முதலாவது செய்மதியான புரொஸ்பெரோ (Prospero) கூட செயலிழந்த நிலையில் இன்றும் பூமியைச் சுற்றி வருவதாகக் கூறப்படுகின்றது.

 

தகவல் : Mail Online

http://www.dailymail.co.uk/sciencetech/article-3950304/One-million-pieces-space-junk-hurtling-planet-spell-disaster-life-Earth.html

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்