எச்சரிக்கை : 'ஏர்கூலர் தண்ணீரில் கூட ஒளிந்திருக்கும் டெங்கு கிருமி'
- Thursday, 18 October 2012 18:32
கேள்வி இந்த சீசனில் தமிழ்நாட்டில் டெங்கு பரவலாக காணப்படுவதாக தகவல்கள் சொல்கின்றன.
பொதுவாக இது போன்ற தொற்றுக் காய்ச்சல் வரும் முன்பாக என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். - உமா சீனிவாசன், வஞ்சிநகரம்.
பதில்: மழைக்காலங்களில் டெங்கு, லெப்டோஸ்பைரோசிஸ் என்ற இரண்டு வகை காய்ச்சல்கள் பரவ வாய்ப்புண்டு. சில இடங்களில் இதற்கான அறிகுறிகளும் காணப்படுவதாக தெரிகிறது. இரண்டு வகையான நோய்களுக்குமே ஆரம்பத்தில் காய்ச்சல், உடல் வலி, முதுகுவலி, லேசான இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படும். அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
லெப்டோஸ்பைரோசிஸ் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெறாவிட்டால் ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து விடும். இதனால் மஞ்சள் காமலை மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்பட பல கோளாறுகள் வரலாம். நோயாளியின் உயிருக்கு கூட ஆபத்தாக முடியலாம்.
இதே போல் டெங்கு காய்ச்சலால் ரத்தத்தில் தட்டணுக்கள் குறைந்து, மூக்கு மற்றும் பல் ஈறுகளில் இருந்து தானாக ரத்தம் வடிதல், ரத்த வாந்தி மற்றும் ரத்த அழுத்தக் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு நோயாளியின் உயிருக்கு பாதிப்பு ஏற்படலாம்.
எனவே, இந்த இரண்டு நோய்களையும் ஆரம்ப நிலையில் கண்டறிந்து, முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் உயிரிழப்புகளை தடுக்கலாம்.
லெப்டோஸ்பைரோசிஸ் நோய் சுகாதாரமற்ற குடிநீர் மூலம் பரவக்கூடியது. எனவே, குடிநீரைக்காய்ச்சி அருந்துவதன் மூலம் இதனை தடுக்கலாம். ஆனால் டெங்கு கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. எனவே, கொசுக்கள் வீட்டிற்கு வந்து நம்மை கடித்து நோயை பரப்பாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் மிகவும் நல்லது.
கொசுக்களால் டெங்கு தவிர யானைக்கால் நோய், மலேரியா, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல் உள்பட நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக மலேரியா காய்ச்சல் என்பது ஆனோபீலஸ் என்ற பெண் கொசு மூலம் பரவுகிறது.
இந்த மலேரியா காய்ச்சலிலும் நான்கு வகைகள் உள்ளன. பிளாஸ்மோடியம், பிளாஸ்மோடியம் மலேரியா, ஓவேல், வைவாக்ஸ் என்ற நான்கு வகை மலேரியா காய்ச்சல் வரும். இதில் வைவாக்சும், ஓவேலும் திரும்ப திரும்ப வரக்கூடியவை. இவை ஒரு முறை தாக்கினால் பின்பு கல்லீரலில் நிரந்தரமாக தங்கி இருந்து கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்று திரும்ப திரும்ப வரும். ஆரம்பத்தில் கட்டுப்படுத்தாவிட்டால் மூளையை பாதிக்கும் செரிபெரல் மலேரியாவாக மாறக்கூடும். இதே போல் டெங்கு காய்ச்சலும் ஏடிஸ் என்ற வகை கொசுக்களால் பரவும். இது நேரடியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவது இல்லை. ஆனால் நோய் பாதித்தவரை கடித்த கொசு, மற்றொருவரைக் கடிக்கும் போது இந்த நோய் பரவும்.
எனவே, கொசுக்களை விரட்ட காயில் மேட், லிக்விட், ஜெல் போன்றவற்றை பயன்படுத்தும் போது சிலருக்கு சுவாச கோளாறு, தோல் அலர்ஜி ஏற்படுகிறது. சிலருக்கு நுரையீரலில் ஒரு வித ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு காற்றை எடுத்துக் கொள்ள முடியாமலும் போய் விடும் நிலை ஏற்படும். கொசுக்கள் மாலை நேரங்களில் தான் வீட்டிற்குள் படையெடுக்கும். அந்த நேரத்தில் கதவு, ஜன்னல்களை சிலர் பூட்டி வைப்பதுண்டு. இதனாலும் வீட்டிற்குள் புதிய காற்று வருவது தடைபட்டு விடுகிறது. இதனால் வீட்டினுள் பிராணவாயுவின் அளவு குறைந்து போகிறது.
இது போன்ற பிரச்சினைகளை தடுக்க வீட்டின் ஜன்னல்களில் ஆடாதோடை இலைகளை தொங்கவிட்டால் இலையில் ஈரப்பதம் காய்கிற வரை கொசுக்கள் நம் வீட்டை நெருங்காது என்று சிலர் சொல்கிறார்கள். செயற்கையான கொசு விரட்டிகளுக்கு பதிலாக, வேப்பிலையை காய வைத்து புகை போடலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். கொசுக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள் படுக்கையை சுற்றிலும் கொசு வலையை கட்டுவதுடன், ஜன்னல்களிலும் வலை பொருத்தலாம். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பது, ஏர்கூலரில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, தோட்டம் மற்றும் வீணான பள்ளங்களில் தண்ணீர் தேங்காமல் தடுப்பது என்ற உத்திகளை கையாண்டு கொசுக்கள் நம்மை அணுகாமல் செய்யலாம்.
பதில் அளித்தவர் : டாக்டர்.முருகன் ஜெயராமன், அப்போலா மருத்துவமனை, மதுரை.
இதே போன்று உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களை கேள்விகளாக
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தீர்கள் எனில் இதே போன்று மருத்துவர்களின் நேரடி பதில்களை தரவிழைகிறோம்.
- 4தமிழ்மீடியா குழுமம்
