கட்டுரைகள்
Typography

புதுவருடம். புதிய நாள். உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கிறீர்களா?  எடையை குறைத்தல், உடற்பயிற்சியை அதிகமாக்கல். ஆரோக்கியமான உணவை உண்ணுதல் போன்ற மாற்றங்களா அவை? கடந்த முறையும் இதே போன்று ஜனவரி 1ம் திகதி தொடக்கம் இந்த மாற்றங்களை பின்பற்றத் தொடங்கினீர்களா? ஒரு மாதத்திற்கு கூட அதனை தாக்குப்பிடிக்க முடியாது பெப்ரவரி மாதத்திலிருந்தே பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டீர்களா?

ஒரு மாறுதலுக்கு 2018ம் ஆண்டுக்கான உங்களது மாற்றங்களை (Resolutions) இப்படி திட்டமிட்டுப் பாருங்களேன் என்கிறது ideas.Ted.Com வலைபப்திவு. காரணம் இவை, உங்களை விறுவிறுப்பாக்க கூடியன. மகிழ்ச்சிப்படுத்தக் கூடியன. புதிய சிந்தனைகளை தூண்டிவிடக் கூடியன. குறித்த வலைத்தளம் பட்டியலிடும் 9 புதிய மாற்றங்களில் முதல் இரு மாற்றங்கள் இவை.

1.பெண்களால் உருவாக்கப்படும் 10 திரைப்படங்களை பார்க்க முடிவெடுங்கள்! 

மாதத்திற்கு ஒரு திரைப்படம் என 2018 வருடம் முழுவதும் குறைந்தது 10-12 திரைப்படமாவது பாருங்கள். ஆனால் அவை முற்றுமுழுதாக பெண்களின் நெறியாள்கையில் உருவான திரைப்படங்களாக இருக்கட்டுமே. அமெரிக்க ஹாலிவூட் திரைப்படத் துறை மட்டுமல்ல. இந்திய பாலிவூட் திரைப்படத் துறையும், ஏனைய தென்னிந்திய திரைப்படத் துறையும், 95% வீதமான திரைப்படங்கள் ஆண்களின் இயக்கத்தில் உருவாகுபவை. பெண்களும் திரைப்படங்களை உருவாக்குகிறார்கள்.  அவர்களது திரைப்படங்களை பார்வையிட்டு அதனை ஊக்கப்படுத்துவது உங்கள் கைகளில் தான் உள்ளது.  

இந்த உலகத்தை நாம் புரிந்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழியும், எம்மை அதில் எங்கு நிறுத்துக் கொள்கிறோம் என்பனதையும் தீர்மானிப்பதும் கதைகள். எமக்கு கிடைக்கும் தனிப்பட்ட அனுபவங்களை விட மாறுபட்ட அனுபவங்களை சந்திக்கும் மக்கள் மீதான நேசிப்பை நாம் உருவாக்கிக் கொள்வதும் இக்கதைகளால் தான். நீங்கள் பார்க்கும் திரைக்கதைகள், உங்களது தொழில் தேர்வு, உங்களது உறவுமுறை, உங்களது தனி அடையாளம் என அனைத்தையும் பட்டை தீட்டக் கூடியன என்கின்றன ஆய்வுகள். ஆகையால், பெண்களால் உருவாக்கப்படும் திரைப்படங்களை நீங்கள் அதிகம் பார்க்கையில், இதுவரை நீங்கள் இந்த உலகத்தை பார்த்திருந்த பார்வையும் வித்தியாசப்படும் அல்லவா என்கிறார் நடிகை Naomi McDougall Jones. முயற்சிப்பீர்களா?

2.உங்கள் எண்ணங்களோடும், கருத்துக்களோடும் முற்றுமுழுதாக மாறுபடும் ஒருவரை மதிய விருந்துக்கு அழையுங்கள்! 

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் எவரையும், எதிர்மறையானவர் அல்லது, இந்த வகையாவனவர் என மட்டம் தட்டிவைத்திருக்கிறீர்களா? காரணம் அவர் உங்கள் எண்ணங்களோடு ஒத்துப் போகாத ஒருவர். அப்படித்தானே!

அவரை ஒரு மதிய போஷன இடைவேளிக்கு சேர்ந்து விருந்துண்பதற்கு அழையுங்கள். சில விதிமுறைகளை கடைப்பிடியிடியுங்கள். எக்காரணம் கொண்டும் நீங்கள் அவரை உங்கள் எண்ணத்துடன் ஒத்துப் போகச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. அல்லது உங்களது எண்ணங்களை நியாயப்படுத்தக் கூடாது. இடையில் கலந்துரையாடலை நிறுத்திவிடக் கூடாது. அவரது எண்ணங்களை அறியும் ஆர்வத்துடன் இருங்கள். செவிமடுங்கள். நேர்மையாக கலந்துரையாடுங்கள்.  அவருடனான சந்திப்பின் பின்னர் உங்களிடம் ஏற்படும் மாற்றத்தை அவதானியுங்கள்.

தொடரும்…

4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

BLOG COMMENTS POWERED BY DISQUS