கட்டுரைகள்
Typography

ஆக்டோபர் மாதம் நீள்வட்ட வடிவிலான விண்கல் ஒன்று பூமியைக் கடந்து மணிக்கு 196 000 மைல் வேகத்தில் கடந்து சென்றது. மிகவும் அசாதாரண முறையில் தென்பட்ட அந்த விண்கல் வேற்றுக்கிரக வாசிகளின் (ஏலியன்களின்) விணகலமாக இருக்கலாம் என பிரபல பௌதிகவியலாளரான ஸ்டீபன் ஹாவ்கிங் உட்பட சில விஞ்ஞானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர்.

இது நிரூபிக்கப் படும் பட்சத்தில் மீடியாவுக்கும் சில வேளைகளில் மனித இனத்துக்கும் தெரிய வந்த பூமிக்கு அருகே வந்த முதல் ஏலியன் கப்பலாக இது இருக்கும் எனப்படுகின்றது. மேலும் இவ்விண்கல் ஒமுவாமுவா எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மர்ம பொருளை அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவின் கிறின் பேங்கிலுள்ள உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைக்காட்டி மூலம் தொடர்ந்து 10 மணித்தியாலங்களுக்கு Breakthrough listen என்ற விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்யவுள்ளது.

இவ்விஞ்ஞானிகள் குழு குறித்த ஒமுவாமுவா பொருளில் இருந்து மின்காந்த அலைகள் வருகின்றனவா என நுணுக்கமாக அவதானித்து வருகின்றனர். ஏனெனில் பிரபஞ்சத்தில் உயிர் பொருட்களால் எமது மொபைல் தொலைபேசி வெளியிடுவதை விட வலிமையான மின்காந்த அலைகளை வெளியிட முடியாது. எனவே இவ்விண்கல் மொபைல் தொலைபேசிக்கு இணையாக அல்லது அதைவிட வலிமையான மின்காந்த அலைகளை வெளியிட்டால் நிச்சயம் அது ஒரு மனிதனின் அறிவுக்கு இணையான தொழிநுட்பத்தைக் கொண்ட ஏதேனும் ஒரு வேற்றுக்கிரக உயிரியின் விண்கலமாகத் தான் இருக்கும் என்கின்றனர் இவர்கள்.

இதுவரை அவதானித்த அளவில் ஒரு சாதாரண விண்கல் விண்ணில் பயணிக்கையில் வெளிவிடக்கூடிய தூசு துணிக்கைகளை ஒமுவாமுமா வெளியிடவில்லை என்பதும் ஒரு சராசரி விண்கல்லுக்கு மாறாக நேர்த்தியான கட்டமைப்பை இது கொண்டிருப்பதும் விஞ்ஞானிகளின் ஊகத்துக்கு வலிமை சேர்க்கின்றது.

மறுபுறம் இவ்விண்கல் இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக உள்ளோமா என்ற மனித இனத்தின் முக்கிய தேடலுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் விஞ்ஞான அடிப்படையில் கிரகங்களுக்கு இடையே பயணிக்கும் விணகலத்துக்கு Propulsion எனப்படும் உந்து சக்தியை ஏற்படுத்தும் பாகம் அவசியமாகும். இப்பாகம் இவ்விண்கல்லில் இல்லாத காரணத்தால் ஒரு அழிந்து போன ஏலியன் நாகரிகத்தின் எச்சமாக விண்ணில் பயணித்து சூரிய மண்டலத்துக்குள் நுழைந்த ஒரு விண் ஓடமாக இருப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்கின்றார் ஹார்வார்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் அவி லேயொப்.

விஞ்ஞானிகளின் ஆரம்ப கட்ட கணிப்புக்களின் படி ஒமுவாமுமா பூமியில் இருந்து 25 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள லைரா என்ற நட்சத்திரத் தொகுதியில் இருந்து 100 மில்லியன் ஆண்டுகளாகப் பயணித்து வந்துள்ளதாம். இதில் வியப்பு என்னவென்றால் ஒமுவாமுமா தனது அதிகபட்ச வேகத்தில் பயணித்திருந்தாலும் 300 000 ஆண்டுகளுக்கு முன் தான் பயணத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு லைரா என்ற நட்சத்திரத் தொகுதி உருவாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி, தகவல் : Mail online

 

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்