கட்டுரைகள்
Typography

 

நீங்கள் 2018 ஆம் ஆண்டு விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு மிக அவசியமான வழிகாட்டியாக உலகின் ஆபத்தான ஆபத்து குறைந்த நாடுகளின் பட்டியல் 'Travel Risk Map 2018' வெளியாகி உள்ளது. இப்பட்டியல் முக்கியமாக பாதைகளின் தரம், பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதி போன்ற 3 விடயங்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நீங்கள் பயணம் செய்ய மிக உகந்த ஆபத்தற்ற நாடுகளின் பட்டியலில் இந்த 3 விடயங்களிலும் மிகச் சிறப்பாக பின்லாந்து, நோர்வே மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாதைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் மிகவும் ஆபத்தான பல நாடுகளைக் கொண்ட கண்டமாக ஆப்பிரிக்கா கண்டம் விளங்குகின்றது. மேலும் பாதுகாப்பு அடிப்படையில் மிக ஆபத்தான நாடுகளாக சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் குயானா ஆகியவை விளங்குகின்றன. மருத்துவ வசதி அடிப்படையில் மிகவும் முன்னேற்றகரமான நாடுகளில் கனடா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகியவை விளங்குகின்றன.

மருத்துவ வசதி அடிப்படையில் மட்டும் பார்த்தால் பிரேசில், சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை சற்று பின்னடைவில் தான் உள்ளன. தனிநபர் பாதுகாப்பு என்று பார்த்தால் இதில் முன்னணியில் கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை விளங்குகின்றன. தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் ஆயுத கலாச்சாரம் காரணமாக கனடா, அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை சற்று பின்னடைவில் உள்ளன.

பாதுகாப்பு குறைந்த நாடுகளில் உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாதம் காரணமாக சிரியா, மாலி, லிபியா, தென் சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் யேமென் ஆகியவை மிக மோசமான இடத்தில் உள்ளன. இதைவிட மெக்ஸிக்கோ, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகள் என்பவையும் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடுகளாக இடம் பிடித்துள்ளன. ஆப்பிரிக்கா தவிர்த்து பாதைத் தரத்தில் மிக மோசமான இடத்தில் பிரேசில், பொலிவியா, சவுதி அரேபியா, ஈரான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளின் பல இடங்கள் இடம் பிடித்துள்ளன. 2018 ஆம் ஆண்டு 63% வீதமான பொது மக்கள் கடந்த வருடத்தை விட சுற்றுலா ஆபத்து அதிகரித்து இருப்பதாக நம்புகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக தனி நபர் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இயற்கை அனர்த்தங்களும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Most Read