கட்டுரைகள்
Typography

 

1997 ஆம் ஆண்டு பூமியில் இருந்து சனிக்கிரகத்தை நோக்கி செலுத்தப் பட்ட கஸ்ஸினி (Cassini) செய்மதி சனிக்கிரகத்தின் வளையங்களினூடு டைவிங் முறையில் சனிக்கிரகத்தின் வாயுப் படலத்தில் மோதி தனது ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டுள்ளது.

இதன் மூலம் சனிக்கிரகத்தின் வளையங்கள் எவ்வாறு தனது 7 சந்திரன்களின் துணையுடன் ஒன்றாகக் கோர்க்கப் பட்டு இணைந்துள்ளன என அரிய தகவல் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் 20 வருடங்கள் விண்ணிலும் 13 வருடங்கள் சனிக்கிரகத்தையும் ஆய்வு செய்து சனியின் சந்திரனான டைட்டனில் ஹுய்ஜென்ஸ் (Huygens) என்ற விண்கலத்தை இறக்கி ஆய்வுப் பணியை விரிவு படுத்திய கஸ்ஸினி இவ்வருடம் சனியின் வளையங்களை ஊடறுத்து அதன் வாயுப் படலத்தில் அண்மையில் மோதியது. இதன்போது அது இறுதியாக அனுப்பிய தகவல் 2017 செப்டம்பர் 15 இல் கிடைக்கப் பெற்றது. இத்தகவல் மூலம் சனியின் வளையத்தில் இருந்து மூலக்கூறுகள் மழை போல் அதன் மத்தியில் பெய்வதாகவும் மிக மெல்லிய அடர்த்தியுடைய அதன் வளையங்கள் எளிதில் ஆவியாகக் கூடிய மெதேன் இனால் ஆனவை என்றும் தெரிய வந்துள்ளது.

கஸ்ஸினி விண்கலத்தின் பிரதான ஆய்வு முடிவுகளில் முக்கியமாக அதன் 7 வருட சுற்றுவட்ட பயண காலத்தில் 2000 ஆம் ஆண்டு அது 6 மாதங்கள் வியாழனை ஆய்வு செய்ததும் அடங்குகின்றது. இச்சமயத்தில் தான் அது சனியின் புதிய 6 சந்திரன்களைக் கண்டு பிடித்தது. 2004 டிசம்பர் 24 இல் அது சனிக்கிரகத்தின் மிக முக்கிய சந்திரனான டைட்டனில் (Titan) ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையமான ESA இன் விண்கலமான ஹுய்ஜென்ஸை வெற்றிகரமாகத் தரையில் இறக்கியது. இதன் மூலம் டைட்டனில் ஹைட்ரோ கார்பன் ஏரிகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

2008 இல். விரிவு படுத்தப் பட்ட கஸ்ஸினியின் செயற்திட்டம் மூலம் சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள கிரகங்கள் குறித்து அவதானிக்க முடியுமா என்ற தேடலுக்கும் வழி கிடைத்தது. தற்போது எமது சூரிய குடும்பத்துக்கு உள்ளே உயிர் வாழ்க்கைக்கு ஆதாரம் உள்ள கிரகங்கள் எவை என்ற போட்டிப் பட்டியலில் செவ்வாய்க் கிரகம், வியாழனின் நிலவான எயூரோப்பா ஆகியவற்றுடன் சனியின் இரு நிலவுகளான டைட்டன் மற்றும் என்சேலடுஸ் ஆகியவையும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS