கட்டுரைகள்
Typography

பூமியில் இருந்து மிக அருகில் அதாவது 11 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள Ros128 என்ற சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்தில் இருந்து மர்ம சமிக்ஞைகள் கிடைத்திருப்பதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போர்ட்டோ ரிக்கோவில் அமைந்துள்ள ரேடியோ தொலை நோக்கிக்கே வானொலி அலைகளாக இந்த மர்ம சமிக்ஞை அலைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் விட்டு விட்டு இந்த அலைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சூரியனின் மேற்புரத்தில் ஏற்படுவது போன்றே Ros 128 நட்சத்திரத்தின் மேற்பரப்பில் எழும் நெருப்பு அலைகளால் (Stellar flare) இந்த சமிக்ஞைகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.


இந்த Ros 128 நட்சத்திரத்தை சுற்றி ஏதேனும் கிரகங்கள் வலம் வருவதாக இதுவரை அறியப் படவில்லை. இந்த அலைகள் குறித்து விளக்கம் அளித்துள்ள வான் உயிரியலாளரான அபெல் மெண்டெஷ் இந்த ரேடியோ அலைகளை அனுப்பியது வேற்றுக்கிரகவாசிகள் தான் என்பதற்கு ஆதாரம் கிடையாது என்றும் ஒளியின் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய மிகவும் சக்தி வாய்ந்த இந்த ரேடியோ அலைகள் பூமியில் உள்ள செய்மதிகளின் தகவல் தொடர்பைப் பாதிக்கும் சாத்தியக்கூறும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது SETI எனப்படும் விண்வெளியில் வேற்றுக்கிரக வாசிகளின் இருப்பை ஆராயும் குழு இந்த சமிக்ஞைகளை மும்முரமாக ஆராய்ந்து வருகின்றது.

Most Read