கட்டுரைகள்
Typography

 

பூமியில் இடம்பெற்று வரும் பரிணாம மாற்றம் மற்றும் வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பிலான சமீபத்திய கண்டுபிடிப்புக்கள் தொடர்பில் இவ்வருடம் ஏப்பிரல் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள வான் உயிரியல் விஞ்ஞான கருத்தரங்கில் (Astrobiology science conference) நாசா விளக்கம்  அளிக்கவுள்ளது. இந்த மாநாடு நாளை திங்கட்கிழமை அரிஷோனா மாநிலத்தின் மேசா நகரில் ஆரம்பமாகின்றது. 

இந்த மாநாட்டில் முக்கியமாக பூமியின் உயிர் வாழ்க்கை மற்றும் எமது சூரிய குடும்பத்தில் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியக்கூறு கொண்ட ஏனைய கிரகங்கள் அல்லது துணைக் கோள்கள் தொடர்பில் நாசா விளக்கம் அளிக்கவுள்ளது. அதிலும் கடந்த வாரம் சனிக்கிரகத்தின் நிலவான என்கெலடுஸ் (Enceladus) இல் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் உகந்த இரசாயன சக்தியாகத் திகழும் ஹைட்ரஜன் வாயு இனை கஸ்ஸினி விண்கலத்தின் அவதானம் மூலம் கண்டு பிடித்திருப்பதாக நாசா தெரிவித்திருந்தது. இது தொடர்பில் இக்கருத்தரங்கில் நாசா முக்கிய விளக்கங்களை அளிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதைவிட உயிர் வாழ்க்கைக்குப் போதிய சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கலாம் எனக் கருதப் படும் வியாழனின் இன்னொரு துணைக் கோளான எயூரோப்பாவுக்கு தானியங்கி ரோபோ ஒன்றை செய்மதி மூலம் தரையிறக்க நாசா திட்டமிட்டு வரும் செயற்திட்டம் குறித்தும் பேசப் படலாம் என எதிர் பார்க்கப் படுகின்றது.

கடந்த வருடம் வியாழனின் பனிபடர்ந்த நிலவான எயூரோப்பாவில் தண்ணீர் ஊற்றுக்கள் இருக்கக் கூடிய சாத்தியக் கூறை ஹபிள் தொலைக் காட்டி அவதானித்திருந்தது. வியாழனுக்கு மிக நெருங்கிய 6 ஆவது துணைக்கோளான இது ஒவ்வொரு 3.5 நாட்களுக்கும் ஒரு தடவை வியாழனைச் சுற்றி வருவதுடன் அதன் ஒரே பக்கமே வியாழனை எப்போதும் நோக்கிய வண்ணம் உள்ளது.

விரைவில் எயூரோப்பாவுக்கு செய்மதி அனுப்பும் திட்டத்தில் உள்ள நாசா, சனிக்கிரகத்தை சுற்றி வரும் தனது கஸ்ஸினி விண்கலத்தின் செயற்பாடும் முடிவுக்கு வரவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : தகவல் Mail Online

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS