கட்டுரைகள்
Typography

பூமியின் சகோதரிக் கிரகம் (Sister planet)என்றும் தனது மிக அதிக எரிமலை செயற்பாடு மற்றும் கரடு முரடான தரை மேற்பரப்பைக் கொண்டிருப்பதால் அசுரக் கிரகம் என்றும் (evil twin) அழைக்கப் படும் வெள்ளிக்கு (Venus) அமெரிக்காவின் நாசாவும் ரஷ்யாவின் IKI என்ற விண்வெளி ஆய்வு அமைப்பும் இணைந்து செய்மதி அனுப்பவுள்ளன.

Venera D என்று பெயரிடப் பட்டுள்ள இந்த மிஷனில் விஞ்ஞானிகள் ரஷ்ய செய்மதி ஒன்றை தொடர்ந்து 3 வருடங்கள் வெள்ளியைச் சுற்றி வரச் செய்வதுடன்

அச்செய்மதியில் இருந்து ஒரு லேண்டரை வெள்ளியின் பாதுகாப்பான ஒரு தரைப்பகுதியில் இறக்கி சில மணி நேரங்களுக்காவது ஆய்வு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளனர். இந்த செய்மதி 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு செலுத்தப் படவுள்ளது. இந்த ஆய்வுத் திட்டம் மூலம் வெள்ளியின் காலநிலை குறித்து அறிவதற்கும் அதன் மூலம் அங்கு உயிர் வாழ்க்கைக்கு வழி உள்ளதா என்று கணிப்பதற்கும் திட்டமிடப் பட்டுள்ளது.

செவ்வாய் மற்றும் வெள்ளி போன்ற தரை மேற்பரப்பைக் கொண்ட கிரகங்களை ஆய்வு செய்வதன் மூலம் எமது பூமியில் கடந்த காலத்திலும் வருங்காலத்திலும் உயிர் வாழ்க்கை எப்படி பரிணாமம் அடைகின்றது எனக் கணிக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு அண்மித்த 2 ஆவது கிரகமும் மிக வெப்பமான கிரகமுமான வெள்ளி, பூமியை விட சிறியது என்பதுடன் அது எதிர்ப் புறமாக சுழல்வதும் குறிப்பிடத்தக்கது. இது மிக மெதுவாக சுழல்வதால் வெள்ளியின் ஒரு நாள் பூமியின் 243 நாட்களுக்குச் சமனாகும். மேலும் இது தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்குள் சூரியனை ஒருமுறை வலம் வந்து விடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 225 பூமி நாட்களுக்குள் இது சூரியனை சுற்றி வருகின்றது.

ஈயத்தைக் கூட உருக்கி விடக்கூடிய மிக அதிக தரை வெப்பநிலையால் வெள்ளியில் உயிர்கள் வாழும் சூழல் கிடையாது ஆகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS