கட்டுரைகள்
Typography

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள குறைந்தப்பட்ச இருப்புத்தொகை
ரூ.5000ம் கட்டாயம் என்றும் தவறினால் அபராதம் என்றும் அறிவித்துள்ளது.
இது திட்டமிடப்பட்ட சட்டவிரோதமான ஒரு பொருளாதார மோசடி என்று பொருளாதார
நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய அரசமைப்பின்படி உருவாக்கப்பட்டுள்ள இந்தியப் பொதுத்துறை வங்கிகள்
மக்களுக்கான சேவையை அதிக லாப நோக்கின்றி வழங்க வேண்டும். அதே நேரத்தில்
இந்தியப் பொருளாதாரத்தை நிலைப்படுத்த அவை சேவையாற்ற வேண்டும் என்பது
அடிப்படையானக் கொள்கை. ஆனால் இந்த சேவைக் கொள்கையை எஸ்பிஐ காற்றில்
பறக்கவிட்டுள்ளது.

மோடியின் பண நீக்க நடவடிக்கையினால் வங்கிகளின் நிதிக் கட்டமைப்பு
வலுவாவதற்குப் பதில் அபரிதமான பணமாகக் குவிந்து செல்லாப் பணமாக
வங்கியைவிட்டு வெளியேறிவிட்டது. ஏனென்றால் அதற்கான மாற்றுப் புதிய பணம்
ரிசர்வ் வங்கியிடமிருந்த கிடைப்பதில் உருவானத் தாமதம். இதனால் கடந்த
நான்கு மாதங்களாக வங்கியில் இருந்த பெருந்தொகையானது மூலதனமாக மாறாமல் அது
சுற்றுக்கு வரமுடியவில்லை. மேலும், வங்கி பரிவர்த்தனைகள்
நடைபெற்றிருந்தால் மட்டும்தான் அது மூலதனமாக மாறியிருக்கும், வங்கிகள்
பணம் வழங்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டதால் இந்த நிலைமை. இதன்
விளைவாய் மக்களின் அவநம்பிக்கைக்கு வங்கிகள் ஆளாகி அவர்களின் பணம்
எடுக்கும் வேகம் கற்பனைக்கு எட்டாத வகையில் அதிகரித்துள்ளது. இதனால்
வங்கிகளின் நிதிக் கட்டமைப்பு ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. எனவேதான்
மக்கள் பணம் எடுப்பதற்கு தொடர்ந்து கட்டுப்பாடுகளை மத்திய அரசு
விதித்துக் கொண்டுள்ளது.

பண நீக்க நடவடிக்கைகள் குறித்து நான் எழுதிய முந்தையக் கட்டுரைகளில் பண
நீக்க நடவடிக்கையினால் விரைவில் வங்கிகள் திவாலாகும் என்று
எச்சரித்திருந்தேன். அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டது
என்பதுதான் எஸ்பிஐயின் அறிவிப்புக் காட்டுகிறது. ஏனெனில் அதனிடம் இப்போது
மூலதனம் இல்லை, அதை திரட்டாவிட்டால் அது திவாலாகிவிடும்.

உலகின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தற்போது பல
வங்கிகளை ஒருக்கிணைத்து மேலும் தனிபெரும் வங்கியாக மாறுகிறது.

இப்படி வங்கிகளை ஒருங்கிணைப்பதின் மூலம் அந்த வங்கிகளின்
வாராக்கடனையும் ஒருங்கிணைத்துக் கொள்கிறது. ஏற்கெனவே கார்ப்ரேட்
முதலாளிகள் வங்கிய கடன்களை திரும்பப் பெற முடியாமல் திணறும் எஸ்பிஐ
ஒருங்கிணைக்கப்பட்ட வாராக்கடனையும் சுமக்க வேண்டும். இருந்தும் கடனை
கார்ப்ரேட் முதலாளிகளிடம் கடனை வசூலிக்க எந்த உறுதியான நடவடிக்கையும்
அதனிடம் இல்லை. எனவே மூலதனத் திரட்டல்தான் ஒரே வழி.

அந்த மூலதனத் திரட்டலுக்கு எஸ்பிஐ பங்குச் சந்தியில் பட்டியலிட்டு தனது
மூலதனத்தைத் திரட்ட வேண்டும், ஆனால் அதற்கு தற்போது வழியில்லை.
ஏனென்றால் பண நீக்க நடவடிக்கையினால் பங்குச் சந்தை ஏறக்குறைய
நசிந்துவிட்டது. எஸ்பிஐக்கு தேவைப்படும் அளவிற்கு பங்குச் சந்தையில்
மூலதனத்தை திரட்ட அதனால் உதவ முடியாது.

பண நீக்கத்தினால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டதுடன், கடந்து
நான்கு மாதங்களாக நீடித்து வரும் பணப் பற்றாக் குறையினால் மக்களின் பணத்
தேவை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களை வங்கியின்
பங்குகளை வாங்கும்படி யாராலும் ஊக்குவிக்க முடியாது. வங்கி அவர்களைக்
கேட்டால் அவர்கள் எதைக் கொண்டு அடிப்பார்கள் என்று சொல்ல முடியாது.

எனவே திருட்டுத் தனமாக மக்களைக் கட்டாயப்படுத்தி தனக்கான மூலதனத்தை
திரட்ட முனைந்துள்ளது எஸ்பிஐ வங்கி. எப்படி..?

1. எஸ்பிஐ வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைப்பட்டதால் அதனிடம் உள்ள
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 50 கோடியாக உயரும்..

2. இந்த 50 கோடிப் பேர் தமது கணக்கில் ரூ.5000ம் கட்டாய இருப்பு
வைப்பதின் மூலம் வங்கிக்குக் கிடைக்கும் உடனடித் தொகை 2,50,000ம் கோடி
ரூபாய். (இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ருபாய்)

3. இந்த 2,50,000கோடி ரூபாய் ஆண்டு முழுவதும் வங்கியில் தங்கும் போது
அதன் சுற்று மதிப்பு 2,50,000கோடி ரூபாய் X 365 நாள்கள் என்று
கணக்கிடும்போது அதன் சுற்று மதிப்பை நீங்கள் முடிந்தால் கணக்கிட்டுக்
கொள்ளுங்கள்.

4. இந்த 2,50,000கோடி ரூபாய் பணத்தை பங்கு சந்தையின் மூலம் திரட்டினால்
செபி விதிகளின்படி பங்குதாரர்களுக்கு வங்கி டிவிடென்ட் தொகையை மூன்று
மாதங்களுக்கு ஒரு முறைத் தரவேண்டும். அதை வங்கி தற்போது தவிர்த்து
விட்டது.

5. இந்த 2,50,000கோடி ரூபாய் வங்கி கடனாகப் பெற்றிருந்தால் அது ஆண்டுக்கு
14 சதவிகிதம் வரை வட்டிக் கட்ட வேண்டும். அது பெருந்தொகையாக இருப்பதுடன்,
இவ்வளவுப் பெரிய தொகையை கடனாகத் தருவதற்கு யார் இருக்கிறார்கள்.
இளிச்சவாய மக்களைத் தவிர.

6. அதே நேரத்தில் வங்கியில் குறைவாக இருப்பு வைப்பவர்களிடம் வாங்கும்
தண்டனைத் தொகை வங்கிக்கு வட்டியில்லா இலவச மூலதனமாக கிடைக்கும். ஆனால்
இருப்பு வைப்பவருக்கு குறைந்தப்பட்ச வட்டி மட்டுமே கிடைக்கும்

7. இப்படியான திருட்டுத் தனமாக மூலதனத் திரட்டல் தொகை வேண்டுமானால்
ரூ.5000 லிருந்து குறையலாம் ஆனால் நிச்சயம் தவிர்க்க முடியாது.
காரணம் என்னவெனில், மோடியின் பண நீக்க நடவடிக்கையினால் வங்கிகளின் நிதிக்
கட்டுமானம் தள்ளாடத் தொடங்கிவிட்டது. ஒருவேளை இந்த கட்டாய இருப்புத் தொகை
உறுதி செய்யப்பட்டு அதனால் திரளும் தொகை சுற்றில் விடப்படும்போது அது
எந்த கார்ப்ரேட் கைகளுக்கு கடனாகப் போய் சேரப் போகிறதோ யார் கண்டார்…

ஆயினும் பொருளாதார நிதியின் கெடு நாள்கள் தொடர்கிறது, அது இனி
தீவிரமடையும் என்பதே தற்போதைய நிதர்சனமாக உண்மை என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்