கட்டுரைகள்
Typography

பொதுவாக வானியலில் எமது பூமி எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் என்பதற்கே பல நிகழ்வுகளைச் சான்றாகக் கூறி வானியலாளர்கள் இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதை ஒட்டிய இன்னொரு முக்கிய கேள்வியாக விளங்கும் எமது பூமி எவ்வாறு முடிவுக்கு வரக் கூடும் என்பதற்கு 6 முக்கிய பிரபஞ்ச நிகழ்வுகளை (Cosmic catastrophes) வகைப் படுத்தியுள்ளனர் வானியலாளர்கள்.

அவை குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலில் எமது பூமியில் மனித இனம் அணுவாயுதப் போர், பூகோள வெப்பமயமாதல், அல்லது மிகப் பெரியளவிலான தொற்று நோய்களால் அழிவைச் சந்திக்கக் கூடும் என்றே கேள்விப் பட்டு வந்த நாம் இவை தவிர்த்து பிரபஞ்ச நிகழ்வுகளாலும் பூமிக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து ஆர்வப் பட்டிருக்க மாட்டோம். அவ்வாறான 6 நிகழ்வுகள் குறித்தே வானியலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

1.சூரிய சூறாவளி (High energy solar flare)

எமது உயிர் வாழ்க்கைக்கு மிக முக்கியமான சூரியன் ஓர் சாதுவான சக்தி என நீங்கள் நினைத்தால் அது ஏமாற்றம் தரக் கூடியதாகும். அவ்வப்போது சூரியனின் மேற்பரப்பில் புயல்கள் எழுகின்றன. சூரிய சூறாவளி எனப்படும் இவை பல சமயங்களில் பூமியை விட மிகப் பெரியவை ஆகும். இவை ஏற்படுத்தும் கதிர்ப்பு பூமியின் காந்தப் புலத்தைப் பாதித்து அழகிய துருவ ஒளிகளாகத் தென்படுவது மட்டுமன்றி மிக வலிமையானவை எனின் பூமியின் வானொலி பன்பலைகளையும் பாதித்து மின்சாரத் தடையையும் ஏற்படுத்தும். வரலாற்றில் 1859 ஆம் ஆண்டு மிகச் சக்தி வாய்ந்த சூரிய சூறாவளி பதியப் பட்டுள்ளது.

நவீன உலகில் மின்சாரம், வெப்பம், வளிப் பதனாக்கி, GPS, இணையம், உணவு, மருந்து இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்த்தால் சூரிய சூறாவளியின் தாக்கம் உங்களுக்குப் புரியும்.

2. விண்கல் அல்லது வால்வெள்ளியின் மோதுகை

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த டைனோசர் இனம் பூண்டோடு அழியக் காரணமாக இருந்த விண்கற்கள் மனித குல வரலாற்றிலும் தாக்கத்தை செலுத்தக் கூடும் என்பதே யதார்த்தமாகும். அளவில் மிகப் பெரிய விண்கற்கள் அல்லது வால் வெள்ளிகள் பூமியில் மிக வேகத்துடன் மோதும் போது பல ஆயிரம் அணுகுண்டுகளுக்கு இணையான பேரழிவையும், கடலில் வீழும் பட்சத்தில் மிகப் பெரிய சுனாமி அலைகளையும் தோற்றுவித்து உயிரின அழிவுக்கு வழிவகுக்கக் கூடும் என்பதை இன்றைய மனித இனம் அறிந்தே வைத்துள்ளது. சில வருடங்களுக்கு முன் ரஷ்யாவில் வீழ்ந்த சிறிய நடுத்தர அளவிலான விண்கல் ஏற்படுத்திய தொடர் அதிர்வு (shock wave) பல கட்டடங்களுக்கு சேதம் விளைவித்தும் பொது மக்களுக்குக் காயங்களை ஏற்படுத்தியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

3. விரிவடையும் சூரியன்

சூரியனில் நடைபெற்று வரும் கருத்தாக்கம் குறித்து அறிந்து வைத்துள்ள நவீன அணுப் பௌதிகவியலாளர்கள் கணிப்பின் படி இன்னும் 7.2 பில்லியன் வருடங்களுக்குப் பிறகு எமது சூரியனின் ஆயுள் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகின்றது. இந்த இறுதிக் கட்டத்தை அடையும் போது சூரியன் தற்போது உள்ளதை விட மிகவும் விரிவடைந்து ஒரு நெபுலாவைத் தோற்றுவிக்கும் செயல் நடைபெறும் எனவும் இதன் இறுதியில் அது வெள்ளைக் குள்ளன் (white dwarf) என்ற நட்சத்திர அந்தஸ்தைப் பெறும் என்று கூறப்படுகின்றது.

இதற்கு முன்பே இன்றில் இருந்து 5 பில்லியன் வருடங்களில் சிவப்பு இராட்சதனாக எமது சூரியன் தற்போது உள்ளதை விட 100 மடங்கு பெரிதாகும் போது அருகே உள்ள கிரகங்கள் யாவும் ஈர்க்கப் பட்டு சூரியனில் சென்று சிதைந்து அழிந்து விடும் எனப்படுகின்றது. இச்சமயத்தில் பூமியில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களும் அழிந்து விடும் என்றும் ஆனால் அதன் பாறைகளால் ஆன மையப் பகுதி தப்பிக்குமா என்று இப்போது கூற முடியாது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

4. காமா கதிர் வீச்சு எரிப்பு (Local gamma ray burst)

ஒரு பொதுவான மத்தியைச் சுற்றி வரும் இரு நட்சத்திரத் தொகுதிகள் (binary star system) அல்லது இறுதிக் கட்டத்தில் ஒரு சூப்பர் நோவாவாக வெடித்து சிதைந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களால் மிகவும் வலிமையான காமா கதிர் வீச்சு வெளியிடப் படுகின்றது. பூமிக்கு அருகில் இது போன்ற நிகழ்வு ஒன்று ஏற்பட்டு காமாக் கதிர்களின் சக்தி வாய்ந்த லேசர் ஒளிக்கற்றை பூமியை நோக்கி வந்து தாக்கினால் அதில் உயிரினங்களுக்குக் கவசமாக உள்ள ஓஷோன் மண்டலம் அழிந்து விடும் என்றும் இதனால் சூரியனின் அழிவை விளைவிக்க வல்ல புற ஊதாக் கதிர்கள் உயிரினங்களின் அழிவுக்கு வழி வகுக்கும் எனவும் மும்மொழியப் படுகின்றது.

5. பூமிக்கு அருகே நிகழும் சூப்பர் நோவா வெடிப்புக்கள்

எமது பால்வெளி அண்டத்தில் ஒவ்வொரு 100 வருடத்துக்கும் ஒரு முறை சராசரியாக இரு சூப்பர் நோவா வெடிப்புக்கள் நிகழ்வதாக அவதானிக்கப் பட்டுள்ளது. பால் வெளி அண்டத்தின் மையத்துக்கு அண்மையில் இந்த சூப்பர் நோவா வெடிப்புக்கள் நிகழும் வாய்ப்பு மிக அதிகமாகும். ஆனால் நாம் வாழும் பூமியும் அது அமைந்திருக்கும் சூரிய குடும்பமும் பால் வெளி அண்டத்தின் மையத்தில் இருந்து 2/3 பங்கு தூரத்தில் வசிக்கின்றோம். எமக்கு அண்மையில் அதாவது 460-650 ஒளியாண்டுகள் தொலைவில் ஓரியன் நட்சத்திரத் தொகுதியில் அமைந்துள்ள Betelgeuse என்ற சிவப்பு இராட்சத நட்சத்திரம் இன்னும் மில்லியன் வருடங்களில் சூப்பர் நோவாவாக வெடிக்குமாம். ஆனால் அதிர்ஷ்ட வசமாக பூமியின் ஓஷோன் மண்டலத்தைப் பாதிக்க வேண்டும் எனில் ஒரு சூப்பர் நோவா குறைந்த பட்சம் 50 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்க வேண்டும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. எனவே எமது மனித இனத்தின் இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கு இது பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என ஆறுதல் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்

6. இடம்பெயரும் நட்சத்திரங்கள்

எமது சூரிய குடும்பத்தில் வால் வெள்ளிகளுக்கு மூலமாகத் திகழும் 'Oort cloud' எனப்படும் பாறைத் தொகுதியை தனது ஆர்பிட்டரில் பயணித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம் ஒன்று மிக அருகே வந்து ஈர்க்கும் பட்சத்தில் எமது பூமியை நோக்கி மிகப் பெரிய வால்வெள்ளி தாக்க வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் எனப்படுகின்றது. பால் வெளி அண்டத்தில் எமது சூரியன் கூடத் தனது தொகுதியுடன் இணைந்து மிக அடர்த்தி குறைந்த Interstellar gas எனப்படும் அண்டங்களின் தோற்றத்துக்கான வாயுத் தொகுதியில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதேவேளை மனித இனம் இன்னும் 1000 வருடங்களுக்கு பூமியில் உயிர் வாழ முடியாது எனப் பிரபல பௌதிகவியலாளரான ஸ்டீஃபன் ஹாவ்கிங் தெரிவித்துள்ளார். மேலும் நாம் இப்போது வைத்திருக்கும் மிக உயர்தர நவீன தொழிநுட்ப வசதிகள் மூலம் பிக் பேங் என்னும் பிரபஞ்சத்தின் தோற்றக் கொள்கையின் மையம் வரை ஊடுருவி ஆராய முடியும் என்ற போதும் எமது அழிவைச் சந்தித்து வரும் கிரகமான பூமியில் இருந்து தப்பிச் செல்லாது இன்னும் 1000 வருடங்களுக்குப் பூமியில் வாழ முடியாது என்பதே அவரின் கருத்தாகும்.

மிகப் பெரிய இயற்கை அனர்த்தம், அணுவாயுதப் போர் அல்லது மரபணு ரீதியாக வடிவமைக்கப் பட்ட மிக மோசமான வைரஸ் மற்றும் பிற ஆபத்துக்களால் பூமியில் மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறும் ஹாவ்கிங் விண்ணுக்கு அல்லது பிற கிரகங்களுக்கு செல்லா விட்டால் மனித இனத்துக்கு வருங்காலம் இல்லை என்றும் கூறுகின்றார். மேலும் 'How to Make a Spaceship' என ஒரு புதிய புத்தகத்தையும் எழுதி ஹாவ்கிங் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தகவல் Mail Online

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்