கட்டுரைகள்
Typography

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்பின் வரலாற்று வெற்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளிறியது போன்ற அரசியல் மாற்றங்கள்,  உலக பொருளாதார சமநிலை ஆட்டம் கண்டிருப்பதையும், தேசியவாதம் பேசும் மக்கள் மற்றும் தலைவர்கள் பக்கம் உலகம் மறுபடியும் சாய்வதையுமே 2016 எனும் இந்த ஆண்டு சாராம்சமாக காண்பிக்கிறது.

டொனால்ட் டிரம்பின் வெற்றி

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக அரசியல் அனுபவங்களோ, இராணுவ ரீதியிலான அனுபவங்களோ இல்லாத ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். தேசிய கொள்கைகளில் (Populism) அதிக நாட்டத்தையும், வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பையும் கொண்ட மக்களின் ஈர்ப்பை அல்லது அவ்வெறுப்பை ஏற்படுத்தும் நியாயப் பிரச்சாரங்களை மேற்கொண்டு டொனால்ட் டிரம்பும் அவரை முன்னிறுத்திய குடியரசுக் கட்சியும் வெற்றியீட்டின. இது அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கைகளையும், கைத்தொழில் கொள்கைகளையும் தேசிய வாதிகளுக்கு ஏற்றவாற்று மாற்றிக் கொள்ள உந்தியுள்ளது.

அதோடு இது அமெரிக்காவில் மாத்திரம் தனியாக நடந்த விடயம் அல்ல. முதலாளித்துவத்திற்கும் தேசியமயமாக்கலுக்கும் ஆதரவாக உலகம் சென்று கொண்டிருக்கிறது என்பதை பறை சாற்றும் ஏணைய உதாரணங்களில் மிக முக்கியமானது அடுத்து வருவது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டிருப்பதால், வெளிநாட்டவர்கள் தங்களது நாட்டை அதிகம் சுரண்ட ஆரம்பித்திருப்பதாக குற்றம் சுமத்திய சில பிரித்தானிய தேசியவாத கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவர் எனும் ஒரே ஒரு காரணத்திற்காக பல பில்லியன் பவுண்டுக்களை, பிரித்தானியா செலுத்துகிறது, ஆனால் பதிலுக்கு எந்தவொரு லாபமும் கிடைப்பதில்லை என பிரச்சாரம் மேற்கொண்டன. இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவளித்து 52% வீதமான மக்கள் வாக்களித்தனர்.

எனினும் இவ்வாறு விலகுவதால் நன்மையை விட ஆபத்தே அதிகம் என அவர்கள் தற்போது புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். ஆனால் தீர்ப்பு எழுதியாகிவிட்டது. மக்களின் அத்தீர்ப்புக்கு மதிப்பளித்து சுமார் இரு வருட காலத்திற்குள் மெதுமெதுவாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவுள்ளது.

இதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளுக்கு ஆதரிக்கும் இத்தாலிய அரசுக்கும் பொதுமக்களிடையே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் தீவிர வலதுசாரி கொள்கையுடைய கட்சிகளின் பலம் அதிகரித்து வருகிறது.

பாரிஸைத் தொடர்ந்து புருசெல்ஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த நவம்பர் 2015 இல் ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஐரோப்பியா முழுவதும் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடாக வரும் அகதிகளின் பக்கம் கவனம் / அச்சம் திரும்பியது. விமான நிலையங்கள் மற்றும் நாட்டு எல்லைகளில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகப்படுத்தப்பட்டன.

எனினும் 2016 மார்ச்சில் புருஸெல்ஸில் ஐ.எஸ் நடத்திய  தாக்குதல்களில்  32 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து இஸ்லாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் ஐரோப்பாவிற்கு நுழைவதை தடுப்பதற்கு துருக்கி தனது எல்லையை மேலும் வலுப்படுத்தத் தொடங்கியது.

ஆனால் இஸ்லாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் தமது கொள்கைகளை பரப்புவதற்கு,  குறியாக்கம் செய்யப்பட்ட (Encrypted) பாதுகாப்பான தகவல் தொடர்பு ஆப்ளிகேஷன்களை பயன்படுத்த தொடங்கினர்.

இதனால், அவர்களுடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சில ஐரோப்பிய இளைஞர்கள் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.  ஐரோப்பாவிலிருந்து சிலர் இஸ்லாமிய தேசியக் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சிரியாவின் நகரங்களுக்கு இரகசியமாக இடம்பெயரவும் தொடங்கினர். கடந்த ஜூலை மாதம், இஸ்லாமிய தேச கிளர்ச்சியாளர்களின் தீவிரகொள்கைகளால் ஈரக்கப்பட்ட துனிசியர் ஒருவர் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதி ஒன்றில் டிரக் வாகனம் ஒன்றை செலுத்தி மேற்கொண்ட தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸின் நோர்மண்டி தேவாலயத்தின் பாதிரியார் படுகொலை செய்யப்பட்டமை, ஜேர்மனியில் அடுத்தடுத்து கத்திக் குத்துச் சம்பவங்கள், குண்டுத்தாக்குதல் முயற்சி என்பவற்றுடன் கடந்த இரு வாரங்களுக்கு முதல், பேர்லினில் உள்ள கிறிஸ்துமஸ்து சந்தை ஒன்றில் டிரக் வாகனம் ஒன்றை செலுத்தி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஐரோப்பாவை நோக்கிய அகதிகளின் தொடர் வருகை, இறப்பு & எதிர்ப்பு!

இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு பின்னர் அதிகளவில் அகதிகள் இடம்பெயர்ந்த ஆண்டு 2015. இதில் ஒரு பகுதியினர் கடல் வழி மார்க்கமாகவும், தரை வழி மார்க்கமாகவும் ஐரோப்பாவை நோக்கி இடம்பெயர்ந்திருந்தனர்.

இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் ஒன்றிணைந்து அகதிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக தமது எல்லைகளை முடக்க ஆரம்பித்தன. இதில் கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தமது எல்லைகளை முற்றாக மூடியதால் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல நினைத்திருந்த பல அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 2016 தொடக்கத்தில் சுமார் ஆயிரக்கணக்கான அகதிகள் கிரீஸை நோக்கி வரத் தொடங்கியிருந்தனர். 2016 முடிவில் அவர்கள் இத்தாலி நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

ஐரோப்பாவை ஆக்கிரமித்துள்ள அகதிகள் பிரச்சினைக்கு இதுவரை எந்தவொரு ஆரோக்கியமான தீர்வும் எட்டப்படவில்லை. மாறாக இச்சிக்கலினால் ஏற்பட்டுள்ள அரசியல் அதிர்ச்சியை ஐரோப்பியர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

அகதிகள் வருகையை கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் - துருக்கி இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து துருக்கி தனது தரைவழி எல்லைப் பகுதிகளை முற்றாக முடக்கிக் கொண்டது. இதையடுத்து ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி வரும் அகதிகள் தமது பயணப் பாதையை மறுபடியும் இத்தாலியை நோக்கிய கடல் வழிப் பயணமாக மாற்றத் தொடங்கினர்.

கடந்த 2015 உடன் ஒப்பிடுகையில், 2016 இல் தரை வழிப் பாதையில் கிரீஸின் ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 77% வீதமாக குறைந்துள்ளது. சுமார் 172,000 பேர் வந்துள்ளனர். ஆனால் துனீசியா, லிபியா மற்றும் எகிப்தின் ஊடாக மத்திய மெடிடேரியன் கடல் வழிப் பாதையினால் இத்தாலிக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 20 % வீதமாக அதிகரித்துள்ளது. சுமார் 173,000 பேர் இவ்வாறு வந்தடைந்துள்ளனர். இந்த ஆபத்தான கடல் வழிப் பயணத்தின் இடை நடுவே கடலில் படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது. இது கடந்த 2015 இல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். ஆனால்  அகதிகளின் பிரச்சினையை உலகம் கண்டுகொள்வதை நிறுத்திக் கொண்டுவிட்ட ஆண்டாகவே 2016 ஐ பார்ப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

இந்த வருடம் தான் ஐரோப்பா நோக்கி வரும் அகதிகளின் இறுதி இலக்காக ஜேர்மனி உருவாகியது. காரணம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜேர்மனி ஓரளவு திறந்த மனதுடன் அகதிகளை வரவேற்கத் தொடங்கியிருந்தது.

ஆப்கானிஸ்தான், சிரியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்களே இந்த அகதிகளில் அதிகமாக காணப்பட்டனர். அவர்கள ஐ.எஸ் உடன் தொடர்பு படுத்தி பலர் சந்தேகம் வெளியிட்டதனால் ஜேர்மனியில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான கட்சிகளின் செல்வாக்கும் உயர்வடையத் தொடங்கியது.

பிரித்தானியாவில் Brexit வாக்கெடுப்பிலும் அகதிகளின் வருகை செல்வாக்கு செலுத்தியது. அகதிகளின் புதிய துறைமுகமாக இத்தாலி மாற்றமடையத் தொடங்கியதால் அங்கும் அரசுக்கும், அகதிகளுக்கும் எதிரான மக்களின் கோபம் அதிகரித்தது.

ஐரோப்பாவில் தேசியவாதக் கொள்கைகள் வலுப்பெறத் தொடங்கியதற்கும், அரசியல் கட்சிகள் பிரிவினை வாதத்தினை ஊக்குவித்ததற்கும்,  அகதிகளின் மாபெரும் உள்வருகை காரணமகியது.

2017 இல் இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நிச்சயம் இந்த அகதிகள் விவகாரம் செல்வாக்கு செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியில் தலைதூக்கும் சர்வாதிகாரம்?

துருக்கியின் ரேகெப் தாயிப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு மேற்கொண்ட இராணுவ சதிப் புரட்சி தோல்வி அடைந்த நிலையில், அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனக்கு ஆதரவான இராணுவ பலத்தையும், பொதுமக்கள் பலத்தையும் அதிகரித்துக் கொண்ட எர்டோகன், ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இது எர்டோகன் சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதை காண்பிப்பதாக மேற்குலக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியதுடன், துருக்கிய அரசை விமர்சிக்கும் நபர்களுக்கான தண்டனைகள், இனிமேல் அந்நாட்டில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பதை காண்பிப்பதாகவும் கூறியுள்ளனர்.

சரிவில் இஸ்லாமிய தேசம் (I.S)!

இஸ்லாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் (IS) சிரியாவிலும், ஈராக்கிலும் தமது பெரும்பாலான ஆக்கிரமிப்பு நிலங்களை இழந்துள்ளனர். இதையடுத்து, தம்முடன் நேரடியாக இணைவதிலும் பார்க்க ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து கொரில்லா தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணுவாயுத பரிசோதனையில் பலம் பெறும் வடகொரியா!

வடகொரியா கடந்த ஒன்பது மாதங்களில் தனது ஐந்தாவது அணு ஆயுத சோதனை வெற்றிகரமாக பரிசீலித்துள்ளது.

தென்கொரிய அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு

மறுபுறம் தென் கொரிய அதிபர் கேயின்-ஹியீ மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள், சாம்சுங் மற்றும் ஹையுண்டாய் நிறுவனங்களுடன் அரசின் இரகசியத் தொடர்பும் அதன் ஊழல் ஆதாயங்களும் வெளிச்சத்திற்கு வந்தன.

பிரேலில் அரசு மீதும் மக்கள் அதிருப்தி!

பிரேசில் ஜனாதிபதி டில்மா ருசெல்ஸ், நிதிச் சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு பதவியிலிருந்து விலக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பதவி வழங்கப்பட்ட மிசெல் டெமெர் மீதும் இக்குற்றச் சாட்டுக்கள் தொடர்கின்றன.

தாயின் கருப்பையில் கை வைக்கும் சீகா வைரஸ் (Zika Virus) : திண்டாடும் மருத்துவ உலகம்

சுமார் 60 வருடங்களுக்கு மேலாக இந்த சீகா வைரஸ் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. மிக குறைவான விஞ்ஞானிகளே இதன் ஆபத்தை அறிந்திருந்தனர். நுளம்பின் ஊடாக தொற்றக் கூடிய நோய்க்காரணியை கொண்டுள்ள குறித்த வைரஸ்  பிரேசிலில் முதன்முறையாக இணங்காணப்பட்டது.  தொற்றுக்கு உள்ளான தாய்மாரின் கருப்பையை இந்நோய்க்காரணி நேரடியாக பாதிப்பதால், பிறக்கும் குழந்தைகள் மூளைச் சேதத்துடன், Shrunken skulls வகையிலான அறுவறுக்கத்தக்க முகத் தோற்றங்களுடன் பிறக்கத் தொடங்கின.

இதன் மூலத் தொற்று ஆபிரிக்காவிலிருந்து உருவாகியது. அடுத்து வரும் வருடங்களில் ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பாவை நோக்கி இந்த வைரஸ் பரவத் தொடங்கும் அபாயம் உள்ளது. போட்றோ ரிக்கோ நாட்டில் ஏற்கனவே இந்த வைரஸால் பீடிக்கப்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். இவ்வருடத்தில் மாத்திரம் 2,300 குழந்தைகள் சீகா நோய் அறிகுறியுடன் பிறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்லதுடன், 18 நாடுகளில் இந்த வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பாடலில் ஊடுருவல் (Hacking) & மற்றும் போலிச் செய்திகளின் பரவல் (Faking News)

இந்த வருடத்தில் இடம்பெற்ற ஹேக்கர்ஸ் தாக்குதல்கள், இணையம் எவ்வளவு பலவீனமானது என்பதை நன்றாகவே பறைசாற்றின. அமெரிக்காவில் ஆளும் ஜனநாயக கட்சியின் தேசியக் குழுவினதும், ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனதும் பல நூற்றுக் கணக்கான தனிப்பட்ட மின் அஞ்சல்களை ஊடுறுவி வெளியிட்டது விக்கிலீக்ஸ் இணையத்தளம். இது ஹிலாரி கிளிண்டன் இராஜாங்க செயலாளராக இருந்த போது மேற்கொண்ட சில தவறுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.

அதோடு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவான பிரச்சாரமும், ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான போலியான பல தகவல்களும் வெளிவரத் தொடங்கின. இறுதியில் டொனால்டு டிரம்பின் வெற்றிக்கு இக்காரணிகளே வித்திட்டதாக அமெரிக்க அரசு குற்றம் சுமத்தியுடன் இதன் பின்னணியில் ரஷ்யாவின் புலனாய்வுத் துறையினருக்கு தொடர்பு இருப்பதாகவும் அறிவித்தது.

போலியான செய்தி இணையத் தளங்கள் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைத் தளங்களின் ஊடாக பரப்பப்பட்ட போலித் தகவல்களும் அமெரிக்க தேர்தலில் பெரும் செல்வாக்கு செலுத்தின. இதைத் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளான பேஸ்புக் இணையத்தளம், போலித் தகவல்களை பரப்புவோரின் அக்கவுண்டுக்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அறிவித்தது. அதோடு சுமார் ஒரு பில்லியனுக்கு மேல் யாஹூ வைப்புக்களின் பெயர், கடவுச் சொல், ஆகியவற்றை ஹேக்கர்கள் திருடியிருந்தனர். லின்க்டின் இணையத்தளத்தின் இணைய வைப்புக்களும் இது போன்று திருப்பட்டன.

தொடரும் சிரியாவின் அவலம்

சிரியாவின் சிவில் யுத்தம் ஐந்து வருடங்களை கடந்து செல்கிறது. சுமார் 50% வீதத்திற்கு மேற்பட்ட சிரிய மக்கள் (11 மில்லியன் மக்கள்) அங்கிருந்து வெளியேறியோ அல்லது கொல்லப்பட்டோ உள்ளனர். அதிபர் பசார் அல் அசாத்தின் ஆட்சியை யாராலும் அசைத்துவிட முடியவில்லை. அதிபர் அல் அசாத்தின் அரச படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் செயற்பட்டுவருவதுடன், இராணுவ உதவி, ஆயுத உதவியையும் மேற்கொண்டு வருவகிறது. மறுபுறம் சிரிய அரசை எதிர்க்கும் கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க மேற்குலக நாடுகள் ஆயுதம் வழங்கி வருகின்றன. அவை சில சமயம் ஐ.எஸ் இன் கைகளுக்கும் சென்றுவிடுகின்றன. ஆக மொத்தத்தில் சிரியாவை ஒவ்வொரு புறமும் துண்டாடுகிறார்கள்.

அண்மையில், பொதுமக்களை பணயக் கைதிகளாக மாற்றியது "அலெப்போ". சிறுவர்கள், பெண்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளன. சிரிய அரச படைகளின் போர்க்குற்றங்களுக்கு ரஷ்யா துணை போவதாக மேற்குலக ஊடகங்களும், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக மேற்குலகம் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்ய ஊடகங்களும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

ஈராக், யேமன் & ஆப்கானிஸ்தானிலும் தொடரும் யுத்தம்

ஐ.எஸ். இடமிருந்து மோசுலை மீட்பதற்கு ஈராக் கடும் பிரேயத்தனம் மேற்கொண்டு வருகிறது. யேமன் யுத்தமும் முடிந்த பாடில்லை. லிபியா மீது ஐ.எஸின் புதிய தாக்குதல் அச்சம் எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ படைகள் 8,000 பேர் வரை தொடர்ந்து நிலைகொண்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் & மியன்மாரில் மனித உரிமை மீறல்கள்

பிலிப்பைன்ஸில் ஆயிரக்கணக்கான கேங்கஸ்டர்கள், போதை வஸ்து கடத்தல்காரர்கள் என குற்றம் சாட்டபவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, மியன்மாரில் இஸ்லாமிய சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் என்பனவும் ஊடக கவனம் பெற்றன.

ஆபிரிக்க நாடுகளிலும் தொடரும் சர்வாதிகாரம்!

கம்பியாவின் சர்வாதிகார அதிபர் யாஹ்யா ஜமே, தேர்தலில் தோற்ற போதும், ஆட்சியிலிருந்து பதவியிறங்க மறுத்தமை, கொங்கோவில் ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்பட்டமை, உகண்டாவின் அதிபர் தொடர்ந்து தன் பதவிக் காலத்தை நீடித்தமை, புருண்டியின் அதிபர் தொடர்ந்து மூன்றாம் தடவையாக தான் பதவி வகிப்பதற்கு ஏற்றவகையில் சட்டத்தை மாற்றியமை என்பனவும் ஆபிரிக்க அரசியல் ஸ்திரத்தன்மை அற்றிருப்பதை காண்பிக்கிறது.

பிரபலங்களின் இறப்புக்கள்

பிரபல குத்துச் சண்டை வீரர் மொஹ்மட் அலி, அமெரிக்க கோஃல்ப் வீரர் ஆர்னொல்ட் பால்மெர், கியூபாவின் புரட்சித் தலைவர் பிடெல் கெஸ்றோ, பிரபல நாவலாசிரியர் ஹார்பெர் லீ , பிரபல இசைக் கலைஞர் பிரின்ஸ் மற்றும் டாவிட் போவி, இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் ஆகியோரின் இறப்புக்கள் இந்த வருடத்தில் பெரும் சோக அலைகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தியிருந்தன.

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

2016 இல் இலங்கை தொடர்பிலான கட்டுரையை இங்கு காண்க 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்