கட்டுரைகள்
Typography

இன்று நவம்பர் 20 ஆம் திகதி உலக சிறுவர்கள் தினமாகும்.

இதை முன்னிட்டு பிரபல தேடு பொறியான கூகுள் தனது முகப்பு லோகோவில் அழகிய சித்திரத்தால் சிறப்பித்துள்ளது. 1954 ஆம் ஆண்டு முதல் ஐ.நா சபையால் பிரகடனப் படுத்தப் பட்டு அனுட்டிக்கப் படும் உலக சிறுவர்கள் தினம் சர்வதேசத்தை இணைப்பதுடன் உலகம் முழுதும் உள்ள சிறுவர்களது நலத்தை முன்னேற்றுவதற்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் என அனுட்டிக்கப் படுகின்றது.

30 வருடங்கள் கழித்து 1989 இல் ஐ.நா சர்வதேச சிறுவர்களின் அடிப்படை உரிமைகளை வரையறுத்தது. அவை வாழ்க்கை, சுகாதாரம், கல்வி மற்றும் விளையாட்டு உரிமை, குடும்ப உறவு, வன்முறையில் இருந்து பாதுகாப்பு, மன ரீதியான பாதுகாப்பு மற்றும் தனித்துவம் அடையாளம் காணப் படுதல் என்பவை ஆகும். இன்றைய நிலையில் கைவிடப் பட்ட சிறுவர் அகதிகளின் புள்ளி விபரம் ஐ.நா ஆல் வெளியிடப் பட்டுள்ளது. அதில் ஐரோப்பா முழுதும் சுமார் 3000 சிறுவர் அகதிகள் முகாம்களில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. பிரான்ஸின் கலாயிஸ் முகாமில் கைவிடப் பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு 157 சிறுவர் அகதிகள் உள்ளனர். அடுத்த 5 வருடங்களில் சிரியாவில் இருந்து சிறுவர்கள் உட்பட சுமார் 20 000 அகதிகளை பிரிட்டன் உள்வாங்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டுக்குள் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் இருந்து கடுமையாகப் பாதிக்கப் பட்ட சிறுவர்கள் உட்பட 3000 அகதிகளை பிரிட்டன் உள்வாங்கும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூன் தெரிவித்துள்ளார். மேலும்  2015 இல் பிரிட்டனுக்கு அகதி அந்தஸ்து கோரிய சிரியாவைச் சேர்ந்த மைனர்களின் எண்ணிக்கை 185 என்றும் கூறப்படுகின்றது.

ஐ.நா இன் தகவல் படி உலகம் முழுதும் 50 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் யுத்தம், வறுமை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகத் தமது இல்லங்களை விட்டு வெளியேறி இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும் மில்லியன் கணக்கான சிறுவர்கள் தமது சமூகத்தில் வன்முறையை எதிர் கொள்கிறார்களாம். இதை விட இன்றைய நிலையில் சுமார் 263 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை என்றும் கடந்த வருடம் உலகின் வறிய நாடுகளில் 5 வயதுக்குக் குறைந்த 6 மில்லியன் சிறுவர்கள் நோய் காரணமாகத் தடுப்பு மருந்து உள்ள போதும் வைத்திய வசதி இன்மையால் உயிர் இழந்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை உலகின் பல பாகங்களில் சிறுவர்கள் யுத்த சூழ்நிலை காரணமாகக் கடும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான சிறுவர்களுக்கு உதவுவதெற்கன உங்கள் நகரங்களுக்கு அண்மையில் தொண்டூழிய தன்னார்வ அமைப்புக்கள் உதவி கோரினால் தயங்காது உங்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள். ஏனெனில் இன்றைய சிறுவர்கள் தான் வருங்கால சந்ததிகள். மேலும் நமது பூமியில் உயிர் வாழ்க்கையை அடுத்தடுத்த தலை முறைக்கு சேதமின்றி கடத்திச் செல்லக் கூடிய ஊடகங்கள் என்பதையும் இன்றைய சிறுவர்கள் தினத்தில் மறவாதீர்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்