கட்டுரைகள்
Typography

எமது பிரபஞ்சத்தின் பருமன் என்பது உண்மையில் எமது கண்கள் மூலம் நிகழ்காலத்தில் உள்ள மிக அதிக வீச்சம் கொண்ட தொலைக் காட்டி மூலம் அவதானிக்கக் கூடிய பிரபஞ்சத்தின் (Obsevable Universe) இன் எல்லைக்குட்பட்ட பருமனே ஆகும்.

இன்னுமொரு முக்கிய பிரபஞ்சவியல் தடயம் என்னவென்றால் எமது பிரபஞ்ச வெளி கூட விரிவடைந்தே வருகின்றது என்பதாகும்.

Redshift எனப்படும் இந்த ஆதாரத்தின் மூலம் நாம் காணும் நட்சத்திரங்கள் மற்றும் அண்டங்கள் (Galaxies) ஆகியவை எம்மை விட்டும் ஒன்றை இன்னொன்றும் விலகிச் சென்று கொண்டே இருக்கின்றன. அவை எவ்வளவு தூரத்தில் இருக்கின்றனவோ அதற்கு ஏற்ப அவை விரிவடையும் வேகம் அதிகரித்த வண்ணம் இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விடயம் தான்.

மூன்றாவது வெற்றிடத்தில் ஒளியின் வேகம் தான் பிரபஞ்சத்தில் எந்தவொரு கூறினதும் அதிகபட்ச வேகமாகும். ஹபிளின் விதி (Hubble's Law) மூலம் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் இவ்வாறு விளக்கப் படுகின்றது. அதாவது எம் கண்களுக்குத் தெரியும் எந்தளவு தூரத்தில் இருந்து பிரபஞ்சத்தின் கூறுகள் ஒளியின் வேகத்தை அடைய நகர்ந்து கொண்டு அல்லது விலகிக் கொண்டிருக்கின்றன என நாம் கேள்வி எழுப்பினால் அதற்கு இந்த ஹபிளின் விதி மூலம் விடை 46.5 பில்லியன் ஒளி வருடங்கள் என்று கூறப்படுகின்றது.

இதனை இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்வோம். நாம் பூமியில் இருந்து எந்த விதத்தில் பிரபஞ்சத்தை நோக்கினாலும் 46.5 பில்லியன் ஒளி வருடங்களுக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு பொருளையும் நாம் பார்க்க முடியாது. ஏனெனில் அப்பொருள் அடங்கியுள்ள வெளி ஒளியின் வேகத்தை மிஞ்சி விரிவடைந்து கொண்டிருப்பதால் இப்பொருட்கள் வெளி விடும் ஒளி நம் கண்களை வந்து சேரவே முடியாது. இதனால் அவற்றை நாம் இனம் காணவும் முடியாது.

நாம் பார்க்கும் இந்த கண்காணிக்கக் கூடிய பிரபஞ்ச எல்லை ஆனது உண்மையில் பிரபஞ்சத்தை கோளமாகவும், பூமியை மையமாகவும் கருதினால் இது அக்கோளத்தின் ஆரை ஆகும். இதன் பெறுமதி 46.5 பில்லியன் ஒளி வருடங்கள் என்றால் விட்டம் அதன் இரு மடங்காக 93 பில்லியன் ஒளி வருடங்களாக இருக்கும். இதனால் தான் நாம் கண்காணிக்கக் கூடிய பிரபஞ்ச எல்லையின் பருமன் 93 பில்லியன் ஒளி வருடங்கள் என்று கூறுகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS