கட்டுரைகள்
Typography

சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் மிகப் பழமையான பாறை, பல வருடங்களுக்கு முன்பு சந்திரனுக்குச் சென்ற அப்போலோ 14 விண்கல விண்வெளி வீரர்களால் அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பாறைப் படிவங்களில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பாறை 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இன்றிருப்பதை விட 3 மடங்கு அதிகமாக பூமிக்கு அருகே சந்திரன் இருந்த போது, பூமியுடன் மோதிய ஒரு மிகப் பெரிய விண்கல் அல்லது வால் வெள்ளியின் காரணமாக பூமியின் தரையில் இருந்து வெடித்து மேலே கிளம்பி சந்திரனை வந்தடைந்த பாறைத் தொகுதியைச் சேர்ந்ததாக இருக்கலம் என விளக்கம் தரப்பட்டுள்ளது.

CLSE எனப்படும் சந்திரத் தரையியல் மற்றும் ஆய்வு நிறுவனத்தால் தற்போது ஆய்வு செய்யப் பட்டு வரும் இந்த பாறையின் இன்னொரு படிமத்தில் சந்திரத் தரையில் உள்ள மாதிரிகளும் கலந்துள்ளன. 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியில் இன்றுள்ள உயிர் வாழ்க்கை மிகவும் நுண்ணுயிர் வடிவில் மாத்திரமே காணப் பட்டதாகவும் அப்போது பூமியின் தரை மேற்பரப்பில் எரிமலைச் செயற்பாடு அதிகம் இருந்ததாகவும், உயிர் வாழ்க்கைக்கு அவசியமான தாதுக்கள் அடங்கிய பாறைப் படிவங்கள் பூமியில் தோன்ற ஆரம்பித்த காலம் அது என்றும் கூறப்படுகின்றது.

இந்த பூமி Hadean Earth என ஆங்கிலத்தில் அழைக்கப் படுகின்றது. 50 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனுக்குச் சென்ற அப்போலோ 14 குழுவினர் அங்கு 33 மணித்தியாலம் உலாவி சுமார் 43 கிலோ அளவு நிலவின் பாறைகளைப் பூமிக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. பூமி தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகளே ஆகியுள்ளதாகக் கணிக்கப் பட்டுள்ள நிலையில், இதற்கு முன்பு பூமியின் மிகப் பழமையான பாறைத் துண்டு மேற்கு அவுஸ்திரேலியாவில் ஒரு சிர்கோன் படிகமாகக் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS