கட்டுரைகள்
Typography

இவ்வருடம் ஆகஸ்ட் 6 ஆம் திகதி சூரியனை நெருங்கி மிகவும் நெருங்கி ஆய்வு செய்யும் செய்மதியான பார்க்கர் சோலார் சேட்டலைட் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் கேப் கெனவரல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகின்றது.

சூரியனின் கொரொனா எனப்படும் அதன் மேற்புறத்தில் இருந்து 3.8 மில்லியன் மைல்கள் தொலைவு வரைக்கும் மிகவும் நெருங்கி இந்த செய்மதி செல்லவுள்ளது.

இதற்கு முன்பு 1976 ஆமாண்டு ஹெலியோஸ் 2 என்ற செய்மதியே சூரியனில் இருந்து 27 மில்லியன் மைல் தொலைவு வரைக்கும் நெருங்கி சென்றிருந்தது. இந்நிலையில் தற்போது செலுத்தப் படவுள்ள பார்க்கர் சோலார் செய்மதி சூரியக் காற்று (solar wind) எனப்படும் அதன் கதிர் வீச்சு விளைவுகளை ஏற்படுத்தும் அதன் வெளிப்புற சூழலை ஆய்வு செய்யவுள்ளது. 7 வருடங்களாகத் திட்டமிடப் பட்டு வந்த இந்த ஒரு சிறிய காரின் அளவு கொண்ட செய்மதியின் ஏவுகை இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது.



சூரியனில் இருந்து பூமியானது ஒரு வானவியல் அலகு (1 AU) தூரத்தில் அதாவது 93 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. இந்நிலையில் சூரியனுக்கு 3.8 மில்லியன் மைல்கள் தொலைவு வரை நெருங்கி செல்வது என்பது மிகச் சவாலான பயணமாகும். இந்நிலையில் இன்றைய மனிதனுக்கு சூரியனின் கொரோனாவில் இருந்து வரும் சூரியப் புயல் காரணமாக பூமியின் காந்தப் புலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து அதாவது நமது தகவல் தொடர்பு தொழிநுட்பக் கருவிகளான செய்மதிகளையும் ரேடார் போன்றவற்றையும் ஏன் செயலிழக்கச் செய்கின்றன என்பது குறித்து அறிய வேண்டிய தேவை உள்ளது. இதனால் $ 1.5 பில்லியன் டாலர் பெறுமதியில் உருவாக்கப் பட்டுள்ள பார்க்கர் சோலார் செய்மதியின் ஆய்வுப் பணி மிக முக்கியமானதாகும்.

இந்த செய்மதியிலுள்ள வெப்பத் தடுப்புப் பொறிமுறை அதாவது heatshield 2500 டிகிரி ஃபரனைட் வரை தடுக்கக் கூடியது. மேலும் இந்த பாதுகாப்புப் பொறிமுறைக்கு உள்ளே உள்ள இச்செய்மதியின் முக்கியமான உபகரணங்கள் 85 டிகிரி பரனைட் வெப்பத்துக்கு அதிகமாகத் தாக்குப் பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த heatshield மாத்திரம் 160 பவுண்டுகள் ஆகும். சூரியனுக்கு மிக நெருங்கி செல்ல வேண்டிய தேவை இருப்பதால் இசெய்மதி மணித்தியாலத்துக்கு 430 000 மைல் வேகத்தில் பயணிக்கவுள்ளது. இது பிலடெல்பியாவில் இருந்து வாஷிங்டன் DC இற்கு ஒரு செக்கனில் செல்லும் வேகமாகும்.

இச்செய்மதி வெள்ளிக் கிரகத்தின் சுற்றுப் பாதையைப் பயன்படுத்தி 7 வருடங்களில் சூரியனுக்கு எம் தொழிநுட்பம் ஈடு கொடுக்கக் கூடிய மிக அண்மைத் தொலைவிலுள்ள ஒழுக்கினை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்