கட்டுரைகள்
Typography

19.நாம் உரமாகிப் போனோமா? என்னுடைய நண்பருக்கு அந்த அழைப்பு வந்த போது மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தார். பல நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து கொண்டுருக்கிறார்.

திருப்பூருக்கு வரும் எந்த நாட்டு இறக்குமதியாளர்களும் இங்குள்ள வேலன் நட்சத்திர விடுதியிற்தான் தங்குவார்கள். அங்கிருந்துதான் நண்பருக்கு அழைப்பு வந்தது.

"ஜெர்மனி நாட்டில் இருந்து உங்களை சந்திக்க வந்துள்ளார். நாளை காலை பத்து மணிக்கு வந்து சந்திக்க வாய்ப்பு இருந்தால் உங்கள் சம்மதத்தை தெரிவியுங்கள் "

அடுத்தநாள் காலை நண்பர் அங்கே சென்று காத்திருந்தபோது தலைகீழ் விதிகள் அவரைப் பார்த்து சிரித்தது. வந்தவர் ஜெர்மன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு பேராசிரியை. 55 வயது பெண்மணி. சமூக ஆர்வலர் அதற்கும் மேலாக இந்த ஆடைத் தொழிலில் புதிதாக பீதியை கிளப்பிக் கொண்டிருக்கும் "உரம் போடாமல் வளர்த்த பஞ்சில் இருந்து உருவாக்கிய ஆடைகள் " என்ற ஆராய்ச்சி கட்டுரையை தயாரித்துக் கொண்டிருப்பவர்.

இதன் காரணமாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஆடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அத்தனை நகரங்களையும் பார்வையிட்டுக் கொண்டிருப்பவர். சந்தையில் கூவி விற்கும் இந்த முட்டாள்தனத்திற்குப் பிறகு உள்ள நதி மூலத்தை காண்பதற்காக ஒவ்வொரு நாடாக பயணம் செய்து கொண்டிருப்பவர்.

எளிமையாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இயற்கை உரங்கள் மூலம் வளர்க்கப்பட்ட செடியில் கிடைத்த பஞ்சும், அதுவே இறுதியாக ஆடையாக உருவாக்கம் அடையும் வரைக்கும் எந்த வித ரசாயன கலவைகள் சேராமல் சந்தைக்கு வந்தடைய வேண்டும். இதைத்தான் விற்பவர்கள் பல்வேறு விதமான விளம்பரங்கள் மூலமாக ஜால வார்த்தைகளில் சொல்லி விற்று கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனையும் டூப்பு........ ஆடைகளில் சாயம் ஏற்றும் போது ஏதோ ஒரு வழியில் செயற்கை சமாச்சாரங்கள் கலந்தேதான் தீரும்.

ஆனால் இதற்கென்று செய்யப்படும் விளம்பரங்கள்?


இதற்கென்று தனியாக உருவாக்கப்பட்ட சந்தைகளும் அதைச் சார்ந்து பல பன்னாட்டு நிறுவனங்களும் தனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலைநாடுகளில் உள்ள கலாச்சாரம் என்பது நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. தீப்பிடித்த மாதிரி யோகா பின்னால் ஓடுவார்கள். அதற்குப் பிறகு வேறு ஒன்றைத் துரத்திக் கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் அவர்கள் செலவழிக்க ஏதோ ஒன்று தேவையாய் இருக்கும். அதன் ஒரு பகுதி இப்போது இந்த இயற்கை உரம் மூலமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள் முதல் ஆடைகள் வரைக்கும் சந்தையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து மேலை நாடுகளில் ஒரு கூட்டம் பல்வேறு விதமாக கூவி அழைத்துக் கொண்டிருக்கிறது.

"இயற்கை வழியின் மூலமாக உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த உத்தரவாதம் அளிக்க என்று பல விளம்பரங்கள் இப்போது மேலை நாடுகளில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்குப் பின்னால் அத்தனையும் வடிகட்டிய முட்டாள்தனம். சிலரின் லாபத்துக்காக பல நாடுகளின் மொத்த வாழ்வாதாரமே பறி போய்க் கொண்டிருக்கிறது.

நண்பர் அந்த பெண்மணியின் அழைப்பை ஏற்று ஆர்வமாய் சென்றது ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே. ஜெர்மனியில் இருந்து வந்தவர் நமக்கு ஒப்பந்தம் தர வந்துள்ளார். எவர் மூலமாகவோ தொலைபேசியைப் பெற்று நம்மை அழைத்துள்ளார். எப்படியும் ஒப்பந்தம் கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்புடன் சென்றவருக்கு பெண்மணி உரையாடத் தொடங்கிய போதே அத்தனையும் புரிந்து விட்டது. வருத்தமாக இருந்தாலும் அவருடன் இரண்டு மணி நேரம் பேசி முடித்து அவர் கேட்ட அத்தனை தகவல்களையும் கொடுத்து விட்டு சோர்வுடன் வெளியே வந்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நாம் சில பட்டிக்காட்டு சமாச்சாரங்கள் மூலம் உணர்ந்து கொள்ளமுடியும்.

என்னுடைய ஒவ்வொரு வகுப்பு பள்ளி இறுதி ஆண்டு விடுமுறையின் போது கட்டாயமாக விடுமுறை நாட்கள் முழுவதும் எங்கள் வயலுக்குச் செல்ல வேண்டும். வீட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முப்பது ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த வயலில் எனக்குப் பிடித்த இடமே உள்ளேயிருக்கும் இரண்டு பெரிய கிணறு தான். கண்கள் முழுக்க பச்சையாக மாறி விடுமோ என்கிற அளவிற்கு மொத்த பரப்பளவும் பச்சை பசேல் என்று இருக்கும்.

மின்சாரம் இல்லாவிட்டாலும் கூட டீசல் பம்பு செட் இருந்த காரணத்தால் எப்போதும் வேலையிருந்து கொண்டேயிருக்கும்.. வயலைச் சுற்றியுள்ள கிராமத்து பசங்களுக்கும், உள்ளே பணிபுரிபவர்களுக்கும் எங்களின் கிணறு வரப் பிரசாதம். கிணற்றுக்கு அருகே உள்ள உதியமரத்தின் கிளைகளில் ஏறி நின்று தொம் தொம் என்று குதித்து கிணற்றின் ஆழம் வரைக்கும் சென்று நீந்தி விளையாடுவார்கள்.

விதவிதமான அவர்களின் டைவ்களும், அவர்களின் பலவிதமான முயற்சிகளையையும் நானும், சகோதர்களும் பம்பு செட் தொட்டியில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்.

உடற்பயிற்சி என்பது என்னவென்று தெரியாமலே வாழ்ந்த அவர்களின் உடம்பு சும்மா கிண்ணென்று இருக்கும். அவர்கள் வீட்டில் வளர்க்கும் ஒவ்வொரு நாய்களும் அவர்களின் சொன்ன பேச்சை கேட்கும். வயலில் உள்ளே திரியும் எலிகளை நாய்கள் கவ்விப் பிடித்து கொண்டு வர குளித்து முடித்து விட்டு சுட்டு தின்பார்கள். அவர்களின் நக்கலும் நையாண்டியுமாய் ஒவ்வொரு பொழுதும் இனிமையாகவே நகரும். .

அறுவடை முடிந்தவுடன் ஆடுமாடுகள் முதல் வெள்ளாடுகள் வரைக்கும் உள்ளே திரிந்து கொண்டிருக்கும். மாட்டுச்சாணி மற்றும் ஆட்டுப் புழுக்கையும் இது போக ஊர் விட்டு ஊராக நகர்ந்து கொண்டு ஆட்டு மந்தைகளை வைத்து இருப்பவர்கள் வயலில் வந்து "கிடாப்பு" வந்து போடுவார்கள். அதிகபட்சம் பத்துநாட்கள் அவர்களின் மொத்த ஆடுகளும் உள்ளே மேய்ந்து கொண்டிருக்கும். அடுத்த பயிர் செய்ய ஏற்பாடு நடப்பதற்குள் பல விதமாக மண்ணுக்கு இயற்கை உரமாக சேர்ந்திருக்கும். உழுவதற்கு முன்பு கொளஞ்சி இலைகளைப் போட்டு ஒரு வர உழுதல் ஓட்ட வயலின் உள்ளே வந்து கொட்டப்படும் இலைதலைகள் அத்தனையும் உரமாக மாறிவிடும். . இத்தனை முயற்சிகளுக்குப் பிறகு தான் அடுத்த கட்ட நகர்வு நகரும்.

ஏற்கனவே இழந்து போயிருக்கும் மண் சத்துக்களை மறுபடியும் உருவாக்கி நாற்றுப் பருவத்தில் தேவைப்படும் சமயத்தில் மட்டுமே செயற்கை உரங்கள் போடப்படும். நான் பார்த்த அதிகபட்ச உரங்கள் பாக்டம்பாஸ், பாலிடால், மற்றும் யூரியா. ஒவ்வொன்றும் வயலில் உள்ள பூட்டப்பட்ட அறையில் தயாராக இருக்கும். தேவைப்படும் சமயத்தில் சித்தப்பாக்கள் மட்டுமே வந்து எடுத்து ஆட்களிடம் கொடுப்பார்கள். ஆனால் இன்று அத்தனையும் மாறிவிட்டது

இன்று விவசாயத்தில் நாம் காண்பது என்ன?

ஒவ்வொரு அடிக்கும் ஏதாவது ஒரு உரத்தைப் போட்டு தான் விளைச்சல் நடந்து கொண்டு இருக்கிறது. விளைகின்ற நிலத்தில் நாம் உரத்தை போடாவிட்டால் மகசூல் என்பது இல்லவே இல்லை என்கிற அளவிற்கு எங்கெங்கு காணிணும் உர மயமாகிவிட்டது. நாற்று உருவாக்க, உருவான பயிரை வளர்க்க, செழிக்க, அதிக மகசூல் வர, என்று ஒவ்வொரு அரிசியுமே ஒரு சயனைடு குப்பியாகவே இருக்கிறது.

விதை நெல் என்பதற்கு எங்கள் வீட்டுக்குள் ஒரு குதிர் போன்ற மண்ணால் செய்யப்பட்ட 6 அடி உயர குடுவை இருக்கும். எப்போதுமே அதில் விதை நெல் நிறைந்து வழிந்து கொண்டிருக்கும். அதில் இருந்து தான் அடுத்த கட்ட விளைச்சலுக்கு உண்டான விதை எடுத்து வேலையாட்களிடம் கொடுப்பார்கள். இப்போது நடந்து கொண்டு இருப்பதைப் போல விதைகளுக்காக எந்த வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற விதைகளை வாங்காமல் அவரவர் மண்ணில் விளைந்த விதையே ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருந்தது.

கதிர் அறுவடையாகும் சமயத்தில் தான் மதிய நேர உணவு வயலுக்கருகே உள்ள கருவேல மர நிழலில் தயார் செய்து கொடுத்தார்கள். சாப்பாட்டைத் தவிர வேறு எந்த கண்ட கருமாந்திரங்களையும் சாப்பிடாமல் வளர்ந்தவர்கள் சாப்பிடும் சாப்பாடென்பது மூன்று ஆட்கள் சாப்பிடும் சாப்பாட்டை ஒருவரே சாப்பிடுவார். வயலில் பணிபுரிபவர்களுக்கு தினசரி சாப்பாடு என்பதெல்லாம் கஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம். இது தான் அவர்களின் பரிபூரண திட்டமிட்ட உணவு. அவர்கள் உழைப்புக்குத் தேவையான அத்தனை சக்தியும் இந்த சோற்றில் தான் இருந்தது. அசைவ உணவு என்பது ஏதாவது விசேடம் அல்லது எதிர்பாராத விருந்தாளிகள் வீட்டுக்கு வரும்போது தான் உள்ளே திரிந்து கொண்டுருக்கும் கோழிகள் குழம்பாக மாறும்.

இன்று உணவு என்றால் நோய் என்று அர்த்தம். அந்த அளவிற்கு செயற்கை உரங்கள் போடப்பட்டு நிலமும் பாழாகிவிட்டது. உண்பவர்கள் உடம்புகளிலும் ஆச்சரியமான நோய்களும் வந்து கொண்டே இருக்கிறது.

இன்று நாம் விளைவிக்க தேவைப்படும் விதைகள் முதல் அதை வளர்க்க தேவைப்படும் உரங்கள் வரைக்கும் ஏதோவொரு பன்னாட்டு நிறுவனம் தான் நேரிடையாகவோ மறைமுகவோ இருக்கிறார்கள். வந்து கொட்டப்படும் அத்தனை உரங்களாலும் விவசாய மண் முழுக்க மலடாகி விட்டது. உழைத்துப் பார்த்தவர்களும் களைத்து விட்டனர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் புகழ் தமிழ் நாட்டுக்குள் ஒரு மாவட்டத்திற்குள் இருந்து அடுத்த மாவட்டத்திற்கு கூட பரவவில்லை. செயற்கை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் புகழ் தான் இலங்கை வரைக்கும் பரவி இருக்கிறது.

இதற்கெல்லாம் நாமும் ஒரு காரணமாகத்தான் இருக்கிறோம். நமக்கு எப்போதும் எல்லாமே அவசரம். உண்ணும் உணவு கூட தொண்டைக்குழிக்குள் இலகுவாக இறங்க வேண்டும். கடித்து திங்கக்கூட நமக்கு இன்று நேரம் இல்லை. இந்த ஒரு காரணமே இன்று கோழி உணவில் சக்கைப் போடு போட்டுக் கொண்டுருக்கும் கெண்டகி அமெரிக்க நிறுவனம்.


அப்பனும், பாட்டனும், பூட்டனும் கற்றுக் கொடுத்த இயற்கை விவசாய உணவு முறையை இன்று வெளிநாட்டு மக்கள் மீண்டும் வந்து கற்றுத் தந்து கொண்டு இருக்கிறார்கள். நாமும் அவர்கள் விரும்பும் " இயற்கை உரத்தைப் போட்டு உருவாக்கப்பட்ட பொருட்கள் " என்று அவர்கள் விரும்பும்படி நடந்து கொண்டு ஏற்றுமதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த இடத்தில் சிரித்து நம்மை நாமே ஆற்றாமைபடுத்திக் கொள்ள வேண்டிய ஒரு சமாச்சாரமும் இருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படும் விதைகள், அவர்கள் தரும் உரங்கள், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் வழிமுறைகள் என்று அத்தனையும் நாம் கடைபிடித்தால் கூட இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து செயல்படும் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் சான்றிதழ்கள் வாங்கினால் தான் இது செல்லுபடி யாகும். பஞ்சுக்கு, நூலுக்கு, சாயம் ஏற்றும் போது, இறுதியாக ஆடைகளுக்கு என்று ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சோதனை.

ஒவ்வொன்றாக தடை தாண்டிய ஓட்டப்பந்தயம் போல் ஜெயித்து வந்தால் தான் “இது இயற்கையில் விளைவிக்கப்பட்ட சமாச்சாரம்” என்று அவர்கள் உலகத்திற்கு முரசறிவிப்பார்கள்.. ஒவ்வொரு கட்டத்திலும் மிகப் பெரிய தொகை கொடுத்து அவர்களிடம் நாம் சான்றிதழ் வாங்க வேண்டும்.

கதை எப்படி போகின்றது பார்த்தீர்களா?

இல்லாவிட்டால் போடா போடா புண்ணாக்கு கதை தான். வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை முழுவதும் உரமாகவே மாறிவிட வளர்ந்த நாடுகள் விளைச்சலை அட்டகாசமாக அறுவடை செய்து கொண்டுருக்கிறார்கள். முதலாளிகளும் கிடைத்த வரைக்கும் லாபம் என்று மனதை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள்.

முதலாளிகளைப் போலவே இங்கே வந்து இறங்கும் தொழிலாளர்களும் தங்களின் வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வாழத் தொடங்கி விடுகிறார்கள். இறுதியில் ஒவ்வொருவரும் தங்களுடைய அடிப்படை வாழ்க்கை கட்டமைப்பு, கலாச்சரம் போன்ற அத்தனையும் மறந்து இறுதியில் பணம் துரத்ததும் பறவைகளாக மாறிவிடுகிறார்கள்.

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 18

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்