கட்டுரைகள்
Typography

16. ஆடைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? திருப்பூரில் தனலெஷ்மி திரையரங்கத்திற்குப் பின்புறம் என்னுடைய பள்ளித் தோழன் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் சங்கரி நிட்டிங் மில்ஸ்.

அது உள்நாட்டுச் சந்தையை குறிவைத்து இயங்கும் அறவு நிறுவனமாகும். இது போன்ற நிட்டிங் நிறுவனங்கள் 24 மணிநேரமும் இடைவிடாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தில் நண்பன் முருகேசன் மேலாளர் பதவியில் இருக்கின்றான். நிட்டிங் நிறுவனம் என்றதும் உங்கள் கற்பனையை பறக்க விடாதீர்கள். இது வேறுவிதமான உலகமாகும்.

லூதியானா அல்லது கோவையில் இருந்து வாங்கப்பட்ட இரண்டாந்தரமான அறவு எந்திரங்களை வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உள்நாட்டுச் சந்தையை குறிவைத்து நடத்தப்படும் இந்தத் துறையை நம்பி வாழ்பவர்கள் அநேகம் பேர்கள். இரண்டாந்தரமான எந்திரங்களை பராமரித்து குறுகிய முதலீட்டில் தங்கள் தொழிலை தொடங்குகிறார்கள்.

வெற்றி என்பது உழைப்பின் மூலம் மட்டுமே வருவதென்பதை அவர்கள் வாழ்க்கையின் மூலம் நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும். பல நிஜ வாழ்க்கை சூத்திரங்களையும் இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கையின் மூலம் நம்மால் கற்றுக் கொள்ளமுடியும். இந்த துறை மட்டுமல்ல இங்குள்ள ஒவ்வொரு துறையுமே உழைப்பு தான் முக்கிய மூலதனம். ஒவ்வொரு காலகட்டத்திலும் இது போன்ற நிறுவனங்கள் தேவைக்கேற்ப ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தங்களை சந்தையில் நிலைநிறுத்திவிடுகிறார்கள்.

திருப்பூருக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஈரோட்டில் இதற்கென்று பிரபலமான சந்தையொன்று இயங்கிக் கொண்டு இருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்கும் இடம். இந்தியாவின் அத்தனை பகுதிகளிலும் இருந்து வந்து கூடுகிறார்கள். மலிவான விலையில் உள்ள ஜட்டி முதல் குழந்தைகளுக்கு தேவைப்படும் பல்வேறு வண்ண ஆடைகள் வரைக்கும் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். கை மேல் காசு. குறைந்த லாபம். சுமாரான தரம். வாரம் ஒரு முறை கூடும் சந்தையில் இன்று வரைக்கும் சாதனை படைத்துக் கொண்டிருகிறார்கள். தரமான ஆடைகள் கிடைத்தால் அது உங்களின் தனிப்பட்ட அதிர்ஷ்டம். அடித்தட்டு மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட அற்புத உலகமது.

ஈரோடு சந்தைக்குத் தேவைப்படும் ஜட்டி முதல் மற்ற அத்தனை உள்ளாடைகளுக்கும் தேவைப்படும் சாயம் ஏற்றப்படாத கோரத் துணியை பல்வேறு அளவுகளில் இது போன்ற சிறிய நிறுவனங்களில் ஓட்டிக் கொடுத்துக் கொண்டுருக்கிறார்கள். கோரத்துணியை மட்டும் சிலர் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.. சிலர் சாயமேற்றிய துணியாகவும் விற்பனை செய்வதுண்டு. வெறும் இடைத்தரகராக செயல்பட்டு அன்றாட வயிற்றுப் பிழைப்பை ஓட்டுபவர்களும் உண்டு. மொத்தத்தில் வாழ்க்கையை தேடி வந்தவர்களை மிக எளிதாக முதலாளியாக மாற்றும் துறையிது.

இது போன்ற சிறிய அறவு எந்திர தொழிற் சாலையில் ஒரு வருடத்தில் அதிகபட்சம் ஐந்து நாட்கள் அதிகாரபூர்வ விடுமுறை கிடைக்கும். தமிழ்நாட்டின் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிந்து கொண்டுருக்கிறார்கள். 12 மணி நேரம் என்பது ஒரு வேலை நேரம். முதல் வாரம் பகல் பொழுது என்றால் அடுத்த வாரம் அவர்கள் இரவு வேலைக்கு மாற்றப்படுகிறார்கள். ஆட்கள் வரவில்லை என்றால் இரண்டு பொழுதுகளும் ஒருவரே பார்க்க வேண்டும். மறுக்க முடியாது.

மின்சாரத்தில் இயங்குவதைத் தவிர வேறொன்றுமில்லை. உள்நாட்டு சந்தைக்கென்று உருவாக்கப்பட்ட அந்த எந்திரங்களில் வேறெந்த புதுமையும் இருக்காது. ஓடும் சப்தங்களும், காற்று வசதிகள் இல்லாத கொடுமையும் ஒருங்கே சேர்ந்த நரகம் அது. ஆனால் அது குறித்து பணிபுரியும் எவரும் கவலைப்பட்டுக் கொள்வதில்லை. காரணம் நடுத்தர வர்க்கமாய் வாழ, ஏதோவொரு நரகத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

ஒவ்வொரு எந்திரத்தின் கொண்டைப் பகுதியில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அளவுக்கு நூல் கண்டுகளை நிறுத்துவதற்கு பல்வேறு எண்ணிக்கைகளில் கம்பிகள் இருக்கும். ஒவ்வொரு கம்பியிலும் நூல் கண்டு நிறுத்தப்பட்டு நூலின் முனையை எந்திரத்தின் மையப் பகுதியின் உள்ளே உள்ள காம்ப் செட்டிங் என்ற (CAMP SET) அமைப்பில் நூலை கோர்த்து இருப்பார்கள். இந்த பகுதி தான் எந்திரத்தின் முக்கிய மூளைப் பகுதியாகும். இந்த மூளைக்குள் அளவான ஊசிகள் வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்டு மூடியபடி இருக்கும். மேலே இருந்து வரும் நூலின் முனை ஊசிகளில் உள்ள காது ஓட்டை வழியாக கோர்க்கப்பட்டு இந்த மூளைப் பகுதியில் இணைக்கப்பட்டு விடும். எந்திரம் ஓடத் தொடங்கிய பிறகு விரும்பிய துணியாக கீழே இறங்கத் தொடங்கும். துணி கீழே இறங்க பத்து கிலோ இருபது கிலோவாக சேர ஒவ்வொரு முறையும் வெட்டி அருகே தரம் வாரியாக பிரித்து அடுக்கி வைத்து இருப்பார்கள். தினந்தோறும் இரவு நேரங்களில் வரும் சாயப்பட்டறை வண்டிகள் மொத்த துணி ரோல்களையும் ஏற்றிக் கொண்டு செல்வார்கள்.

துணிகளில் பல வகைகள் உண்டு. ஆடைகளை கோடைகாலம், குளிர்காலம் என்று இரண்டு விதமாக பிரித்து வைத்து இருந்தாலும் ஒவ்வொன்றுக்குள்ளும் பல்வேறு கிளை நதிகள் உண்டு. மெல்லிய, கடினமான, என்று தொடங்கி பல்வேறான வடிவமைப்பு, அத்தனையும் நிட்டிங் எந்திரத்தின் மூளைப்பகுதியில் உள்ள வடிவமைப்பு பொறுத்து மாறுகின்றது.

நீங்கள் விரும்பக்கூடிய துணியின் வடிவமைப்பை சிறிய துண்டாக கத்தரித்துக்கொண்டு போய் காட்டினால் அதன் சூட்சமத்தை பார்த்தவுடன் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் எந்திர வடிவமைப்பை மாற்றி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றித் தருவார்கள். ஒவ்வொரு முறையும் நிட்டிங் எந்திரங்களில் நாம் விரும்பும் துணியின் வடிவமைப்புகளை மாற்றிக் கொள்ள வசதியுண்டு. ஓரே எந்திரத்தில் பத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை மாற்றிக் கொள்ள முடியும். இன்றைய தினத்தில் அத்தனை நவீனங்களும் வந்து விட்டது. நீங்கள் உடுத்தும் சில ஆடைகளில் ஜட்டியின் துணி ஒரு விதமாகவும் பனியனி துணி வேறுவிதமாகவும் இருப்பதை பார்த்திருப்பீர்கள் தானே? சில துணிகளில் உள்ளே கடினமாக சொர சொரப்பாக இருக்கும். அதே துணியின் வெளிப்புறம் முயலை தடவிப் பார்க்கும் சுகம் தெரியும். அத்தனையும் நிட்டிங் எந்திரத்தின் மூளைப் பகுதியில் செய்யப்படும் ஜாலவித்தையாகும்.

நிட்டிங் எந்திரத்தின் தரைப்பகுதியில் இரண்டு உருளைச் சக்கரத்திற்குள் மாட்டியுள்ள கம்பி சுழன்று கொண்டுருக்கும். இந்த உருளையில் தான் ஓடிவரும் துணி சேர்ந்து கொண்டுருக்கும். உருளைகள் தொடர்ச்சியாக உருண்டுக் கொண்டே இருக்கும் உருளையில் மாட்டப்பட்டுள்ள கம்பி துணியை சேகரித்துக் கொண்டுருக்கும். கீழே வரும் துணிகளுக்கு நடுவில் ஒரு பல்பு எறிந்து கொண்டுருக்கும். இந்த பல்பு வெளிச்சத்தின் மூலம் துணியின் தரமும் தராதரமும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு எந்திரத்திற்கும் ஒரு அளவு உண்டு.. ஒவ்வொன்றும் மனிதர்களின் மார்பு அளவைப் பொறுத்து மாறுபடும். நிட்டிங் எந்திரத்தின் முக்கிய உருளைகள் ஒவ்வொரு அளவிலும் உருவாக்கப்பட்டு தயாராகயிருக்கும். நமக்கு எந்த அளவு தேவைப்படுகிறதோ அந்த வகையான உருளைகளை நிட்டிங் எந்திரத்தில் பொறுத்திவிடுகிறார்கள்.

ஒவ்வொரு எந்திரத்தின் அருகே ஒருவர் இருப்பார். தவறாக கோர்க்கப்பட்ட நூல், தரமில்லாத நூல் என்று தொடங்கி உள்ளே ஓடிக் கொண்டுருக்கும் உடைந்த ஊசியின் விளைவாக உருவாகும் விளைவுகள் வரைக்கும் கண்காணித்துக் கொண்டிருப்பவரால் எளிதாக கண்டு கொள்ள முடியும். ஒருவர் பணிபுரியும் 12 மணி நேரமும் வேறு எந்த பக்கமும் நகர்ந்து விட முடியாது.

ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. ஓடிக் கொண்டிருக்கும் எந்திரத்தின் உள்ளேயுள்ள ஒரு ஊசி உடைந்திருந்தாலும், உருவாக்கும் விளைவுகள் கண நேரத்தில் பெரிய இழப்பை உருவாக்கிவிடும். சில சமயம் மொத்த எந்திரத்தையும் காயலான் கடைக்கு அனுப்ப வைத்துவிடும். அருகே இருப்பவரின் வேலைக்கும் ஆப்பு வைத்துவிடும். இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்கள் என்றால் நிமிடத்தில் லட்ச கணக்கான நஷ்டத்தை உருவாக்கிவிடும். இது போன்ற நிறுவன முதலாளிகள் வர வேண்டிய கடன்களை வசூலிக்க முடியாத சூழ்நிலையில் கந்து வட்டிக்காரரை தேடி போய்க் கொண்டிருப்பார்.

நூல் வேகமாக ஊசியை நோக்கி ஓடி வரும் போது பறக்கும் பஞ்சு துகள்கள் அந்த இருட்டு அறையை திரைப்பட கனவுக் காட்சி போல் மாற்றியிருக்கும். உள்ளே இருப்பவர்கள் பணி நேரம் முழுவதும் அந்த பஞ்சு துகள்களை சுவாசித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். உள்நாட்டு சந்தை என்பது மிகக் குறைவான லாபத்தைக் கொண்டுள்ளதைப் போலவே எந்த முதலாளி வர்க்கமும் தொழிலாளிக்கு உண்டான அடிப்படை வசதிகளை செய்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை. தொடக்கத்தில் திருப்பூர் இது போன்ற உள்நாட்டு எந்திரங்களைச் சார்ந்தே இருந்தது. ஆனால் இறக்குமதியாளர்களின் தேவையறிந்து, இன்று கணிணி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய அத்தனை அறவு (KNITTING MECHINES) எந்திரங்களும் திருப்பூரில் உள்ளது.

இன்றுவரையிலும் ஜெர்மன், ஸ்விட்சர்லாந்து,கொரியா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து ஒன்றை ஒன்று மிஞ்சம் அளவிற்கு வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த நாடுகளுக்கெல்லாம் ஆப்படிக்கும் அய்யா சீனாவின் திறமை ஒவ்வொரு முதலாளிகளையையும் இங்கே படாய் படுத்திக்கொண்டிருக்கிறது. இறக்குமதியாகும் நவீன அறவு எந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஒப்பீட்டளவில் வேலைப் பளூவும் குறைவு. அவர்களின் ஆரோக்கியமும் சற்று மேம்பட்டதாய் இருக்கிறது.

உள் நாட்டில் தயாராகும் எந்திரத்தில் நூல் திறந்த வெளி பயணத்தின் மூலமாகத் தான் நடுப்பகுதியில் உள்ள ஊசியை வந்து அடைகிறது. அதுவே நவீன எந்திரங்களில் இந்த நூல் பயணம் செய்வதற்கு தனியாக சிறிய குழாய் போன்ற வசதிகள் உண்டு. நூல் குழாய் வழியாக ஊசி இருக்கும் பகுதிகளுக்குள் வரும் போது பறக்கும் பஞ்சு துகள் அத்தனையும் ஒரே இடத்தில் சேர்க்கப்பட்டு விடும். சில நவீன எந்திரங்கள் குளிர் சாதன வசதிகளுக்குள் இருப்பதால் பணிபுரிபவர்களுக்கு இன்னும் சிறப்பாய் இருக்கும்.

15 வருடங்களாக இந்த உள்நாட்டு சந்தையை அடிப்படையாக வைத்து இயங்கிக்கொண்டிருக்கும் துறையில் பணிபுரியும் நண்பன் இப்போது வாரம் 4000 ரூபாய் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளான். அறவு எந்திரம் தரும் சப்தத்தை வைத்தே என்ன பிரச்சனை என்று எளிதில் கண்டு கொள்ளக் கூடியவன். எந்திரத்தை முழுமையாக கழற்றி மாட்டிவிடக் கூடியவன். வாழ்க்கையையும் எந்திரமாகவே மாற்றிக் கொண்டவன். ட வடிவில் உள்ள அந்த டொக்கு சந்தில் ஒரு பக்கத்தில் சாக்கடை கழிவுகள் மிதந்து போய்க் கொண்டிருக்கும். மற்றொரு மூலையில் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உபயோகிக்கும் கழிப்பறை.

மிக நெருக்கமாக உள்ளேயிருக்கும் 20 எந்திரங்கள் இருக்கும் பகுதிகளுக்குள் முறைப்படியான மின்சார பாதுகாப்பு சாதனங்களோ அவசரகால வழிகளோ இல்லை. ஒரே ஒரு பாதை மட்டுமே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக உடைந்து போயிருக்கும் அந்த துருப்பிடித்த கம்பிக்கதவை மூட வேண்டிய அவஸ்யமில்லாமல் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளே எப்போதும் போல இருட்டறை. இருட்டை விரட்ட இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் குழல் விளக்குகள் தந்து கொண்டிருக்கும் சூடு ஒரு பக்கம், அடுத்து பஞ்சு தரும் உஷ்ணம். காற்று இல்லாத இடமென்பதால் உள்ளே சுற்றிக்கொண்டிருக்கும் பஞ்சுத் துகள்கள் வெளியேற வாய்ப்பில்லாத இடம். இவ்வாறான ஒரு இடத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களைப் பற்றி இப்போது உங்களால் யோசித்து பார்க்க முடிகிறதா? நீங்கள் போடும் பனியன் ஜட்டிக்காக எத்தனையோ ஜீவன்கள் இப்படித்தான் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எந்திரத்தின் தொடர்ச்சியான சப்தங்களை சகித்துக் கொண்டு வாழப் பழகிவிட்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். எத்தனையோ பேர்கள் விரும்பும் கவர்ச்சியை தந்து கொண்டிருக்கும் உள்ளாடைகளுக்காக தங்கள் வாழ்க்கையை ச்ச்சீசீ என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தொடர் மின் வெட்டு இருந்தால் இது போன்ற நிறுவனங்கள் இயங்காது. ஜெனரேட்டர் வைத்து இயங்கும் அளவிற்கு லாபமும் இருக்காது. தொடக்கத்தில் தனித்தனியான நபர்கள் எந்திரத்தின் அருகே நின்று கொண்டு இறங்கும் துணியை கவனித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது மூன்று எந்திரங்களுக்கு ஒருவரே பொறுப்பு. அந்த அளவிற்கு ஒரு புறம் சர்வதேசம் ஜவுளித்துறைக்கு பல நெருக்கடிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதற்குச் சரிசமமாக முதலாளிகளின் ஆசைகளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முதலாளிகளின் அதிகப்படியான ஆசைகள்தான் முறையற்ற போட்டிகளை உருவாக்கி, இன்று இந்த தொழிலை மூழ்க வைத்துக் கொண்டிருக்கிறது.

சற்று யோசிக்கின்றீர்களா..?

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 15

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்