கட்டுரைகள்
Typography

நமது நட்சத்திரப் பயணங்கள் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் புதிய அத்தியாயம் 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் தலைப்பில் ஆரம்பிக்கப் பட்டு இரு தொடர்கள் முடிந்து விட்டன.

சென்ற இரு தொடர்களிலும் பிரபஞ்சத்தில் பூமி, சூரியன் ஏனைய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் விண்வெளியில் எவ்வாறு நிலை பெற்றுள்ளன என்ற விளக்கம் பண்டைய காலத்தில் அரிஸ்டோட்டிலில் ஆரம்பித்து நியூட்டனின் காலம் வரை எவ்வாறு திருத்தம் பெற்று படிப்படியாக மனித அறிவுக்குத் தெளிவாகி வந்துள்ளது என்பதை அலசியிருந்தோம்.

இதில் நியூட்டனின் வருகைக்குப் பின்னரும் பிரபஞ்சத்தின் மையம் எது? நட்சத்திரங்கள் எப்படி விண்வெளியில் நிலையாக ஒரு இடத்தில் காணப் படக் கூடும்? அவற்றுக்கிடையே ஈர்ப்பு விசை தொழிற்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலையாமல் ஏன் உள்ளன? எனும் கேள்விகளுக்கு விடை காணப்படாமல் இருந்தது.

இவ்விடயம் தொடர்பாக அக்காலத்தில் வாழ்ந்த 'ரிச்சர்ட் பென்ட்லேய்' எனும் விஞ்ஞானி ஒருவருக்கு 1691 ஆம் ஆண்டு நியூட்டன் எழுதிய கடிதத்தில் பின்வரும் விளக்கம் காணப்படுகின்றது.


ரிச்சர்ட் பென்ட்லேய்


''விண்வெளியில் எல்லைக்கு உட்பட்ட இடமும் குறிப்பிட்டளவு நட்சத்திரங்களும் மட்டும் காணப் பட்டால் தான் பிரபஞ்சத்துக்கு மையம் இருக்க முடியும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதுடன் ஈர்ப்பு விசை காரணமாக நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உருக்குலைந்து போகும் வாய்ப்பும் ஏற்படும். ஆனால் இதற்குப் பதிலாக பிரபஞ்சம் எல்லையற்றதாகவும் அதில் முடிவற்ற நட்சத்திரங்கள் சம அளவுக்கு ஏறக்குறைய கூடவோ குறையவோ பங்கிடப் பட்டும் இருந்தால் அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைய வாய்ப்பில்லை. ஏனெனில் அவை ஈர்ப்பு விசையால் ஈர்க்கப் பட்டு மோதிக் கொள்ள பிரபஞ்சத்தின் மையப் புள்ளி இதுதான் என ஒன்றும் கிடையாது.''

எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சம் (Static Universe)

மேலும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் மையம் தான் எனக் கருதவும் முடியும். ஏனெனில் எந்த ஒரு நட்சத்திரத்தைச் சுற்றியும் எல்லாப் பக்கத்திலும் முடிவற்ற நட்சத்திரங்கள் அமைய முடியும்.

20 ஆம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னர் யாருமே பிரபஞ்சம் விரிவடைகின்றது அல்லது சுருங்குகின்றது என்ற கருத்தை முன்வைத்ததில்லை. ஆனால் பொதுவாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட கருத்து என்னவென்றால் கடந்த காலத்தின் ஏதோ ஒரு பகுதியில் இன்று நாம் பார்ப்பதை விட சற்று வேறுபாடு உடைய பிரபஞ்சம் படைக்கப் பட்டது எனும் கோட்பாடு அல்லது சற்றும் மாறுபாடு அடையாத பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது எனும் கோட்பாடாகும். பிரபஞ்சம் அழிவில்லாதது மற்றும் மாறுபாடில்லாதது என்ற எண்ணம் அக்கால மத நம்பிக்கைப் படி மனிதன் வயதாகி இறக்க நேரிட்டாலும் பிரபஞ்சத்துக்கு இறப்பில்லை என்ற அடிப்படையில் தோன்றியதாகும்.

நியூட்டனின் கொள்கைகளின் படி பிரபஞ்சம் நிலையான (static) ஒன்றல்ல என்று தெளிவு படுத்தப் பட்ட போதும் யாரும் பிரபஞ்சம் விரிவடைகின்றது என எண்னவில்லை.

எனினும் அக்கால வானியலாளர்கள் ஈர்ப்பு விசையுடன், (gravity) விலக்கு விசை (repulsive force) எனும் புதிய கருதுகோளைச் சேர்த்து சற்று மாறுபட்ட எண்ணங்களை முன்வைத்தனர். அதாவது மிக அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு இடையே ஈர்ப்பு விசை விலக்கு விசையாக தொழிற்படுகின்றது எனவும், இது கிரகங்களுக்கு இடையிலான இயக்கத்தைப் பாதிக்காது என்றும் கருதினர்.

 



 ஈர்ப்பு விசையும் விலக்கு விசையும்


இக்கோட்பாட்டின் மூலம் முடிவற்ற நட்சத்திரங்கள் விண்ணில் சமநிலையில் பரப்பப் பட்டுள்ளன எனும் கருதுகோள் உறுதிப் படுத்தப் பட்டது. அதாவது அருகிலுள்ள நட்சத்திரங்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை மிக அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு இடையிலான விலக்கு விசையை சமப்படுத்துவதன் மூலம் அவை நிலையாக ஓரிடத்தில் உள்ளன என விளக்கப் பட்டது.

எனினும் இந்த சமநிலைக் கோட்பாடு இக்காலத்தில் பொருத்தமற்றது என்றே நாம் நம்புகின்றோம். இதற்குக் காரணமாக விண்வெளியில் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஒரு நட்சத்திரம் மிகச் சிறிய இடைவெளியில் இன்னொரு நட்சத்திரத்துடன் காணப் பட்டால் அவற்றுக்கிடையேயான ஈர்ப்பு விசை விலக்கு விசையை விட அதிகமாகி அவை ஒன்றின் மேல் ஒன்று வீழத் தொடங்கி விடும்.

இதற்குப் பதிலாக இவ்விரு நட்சத்திரங்களுக்கும் இடையிலான தூரம் அதிகமானால் அவற்றுக்கிடையேயான விலக்கு விசை ஈர்ப்பு விசையை விட அதிகமாகி அவை ஒன்றையொன்று விலக்கி நெடுந்தூரம் சென்று விடும்.

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் எதிர் பாருங்கள்.... : புதிய தொடர் : நட்சத்திரப் பயணங்கள் 26 : பிரபஞ்சவியல் 9 (பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் IV)


நன்றி - தகவலுதவி: 'A Breif History of Time' - Stephen W.Hawking

 

முன்னைய பதிவுகள் :

நட்சத்திரப் பயணங்கள் 18 (பிரபஞ்சவியல் 1, கரும் சக்தி)

நட்சத்திரப் பயணங்கள் 19 (பிரபஞ்சவியல் 2, கரும் சக்தி 2)

நட்சத்திரப் பயணங்கள் 20 (பிரபஞ்சவியல் 3, கரும் பொருள்)

நட்சத்திரப் பயணங்கள் 21 (பிரபஞ்சவியல் 4, கரும்பொருள் 2)

நட்சத்திரப் பயணங்கள் 22 (பிரபஞ்சவியல் 5, கரும்பொருள் 3)

நட்சத்திரப் பயணங்கள் 23 (பிரபஞ்சவியல் 6, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்)

நட்சத்திரப் பயணங்கள் 24 (பிரபஞ்சவியல் 7, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 2)

 

- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்