Saturday, May 25th

Last update01:10:38 PM

மிகச்சாதாரண ஒன் லைனக்கொண்டு அசாதாரணமாக திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்த படம் Frozen

இரு வருடங்களுக்கு முன் ஹாலிவூட் வெளியாகி பார்த்த அனைவரையும் உரையவைத்த திகில் திரைப்படத்தின் விமர்சனத்தை சுவராஸ்யமாக தனது கவிதை காதலன் வலைப்பதிவில் பதிவுட்டுள்ளார் மணிகண்டவேல்.

இப்பதிவை மீள்பதிவிட அனுமதித்தமைக்கு அவருக்கு நன்றி கூறி இங்கு மீள்பிரசுரிக்கிறோம்.

- 4தமிழ்மீடியா குழுமம்

ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு நொடியும் திகிலுடன், அடுத்து என்ன நடக்குமோ என்ற பரிதவிப்புடன் ரசிக்க வைத்த திரைப்படம் இது. மிகச்சாதாரண ஒன் லைனக்கொண்டு அசாதாரணமாக திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்த இந்த திரைப்படத்தைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

டான், ஜோ என்ற இரண்டு ஆண் நண்பர்களும் பார்க்கர் என்ற பெண்ணும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் மேற்குப்பகுதியிலுள்ள பனி மலையில் பொழுதை கழிக்க விரைகிறார்கள். அந்த இடம் கடும் குளிரானது. அங்கு பனிக்கட்டிகளே எல்லா இடங்களையும் ஆக்ரமித்திருக்கிறது. அந்த இடத்தில் பனிச்சிகரங்களுக்கு இடையே செல்லக்கூடிய விஞ்ச் ஒன்று அமைத்திருக்கிறார்கள். அதுதான் அந்த இடத்தின் சிறந்த பொழுதுபோக்கு. ஒரு நாள் சாயந்திரவேளையில் அந்த ரோப் காரை இயக்குவதை நிறுத்தும் வேளையில், நண்பர்கள் மூவரும் அந்த ஆபரேட்டரிடம் லஞ்சம் கொடுத்து இன்னும் கொஞ்சம் நேரம் இயக்கும்படி சொல்லி அந்த விஞ்சில் ஏறிக்கொள்கிறார்கள். எல்லாரும் அந்த விஞ்சில் இருந்து இறங்கிவிட, இவர்கள் மூவர் மட்டும் அதில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

ஜாலியாக பனிகளை ரசித்துக்கொண்டே வரும் நேரத்தில், அந்தரத்தில் அவர்கள் செல்லும் விஞ்ச் நிற்கிறது. எல்லா விளக்குகளும் அணைக்கப்படுகின்றன. வேறொரு ஆபரேட்டர் ஷிப்ட் மாறும் வேளையில், தவறுதலாக அந்த விஞ்சை நிறுத்தி விடுகிறார். வேறு யாருமே இல்லாத அந்த மலையில், இரவில், கடும் குளிரில் அவர்கள் மூவர் மட்டும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டும் அல்லாமல் இன்னும் 4 நாட்கள் கழித்துத்தான் வேலைக்கு ஆட்கள் வருவார்கள். அதுவரை இந்த மலைப்பயணத்திற்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு ஆபத்தான சூழ்நிலையில் நண்பர்கள் மூவரும் மாட்டிக்கொள்கிறார்கள்.

 நேரம் ஆக, ஆக, கடும் குளிர் வீச ஆரம்பிக்கிறது. அந்த விஞ்ச்’சிலேயே குளிரில் நடுங்க ஆரம்பிக்கிறார்கள். ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என்ற நினைப்பில் டான் கீழே குதித்து. நடந்து சென்று யாரையாவது உதவிக்கு கூட்டி வருகிறேன் என்று கூறுகிறான். டான் கீழே குதிக்கும் போதுதான் அந்த பயங்கரம் புரிகிறது. அதாவது காலுக்கு கீழே ஐஸ் குவியலாக இல்லாமல், உறைந்து ஐஸ்கட்டியாக இருக்கிறது என்று.



கீழே குதித்த டான் நேரே அந்த ஐஸ்கட்டியின் மீது காலை வைக்க, கால் ஒரு விறைப்பான பாறையின் மீது மோதியதைப்போல் உடைகிறது. கால் எலும்புகள் சதையை கிழித்துக்கொண்டு வெளியே தொங்குகின்றன. மேலே இருக்கும் இரண்டு நண்பர்களும் அதிர்ந்து போகிறார்கள். இதைவிட பேராபத்தாக கீழே குதித்த டானை சுற்றி பனி ஓநாய்கள் சூழ்கின்றன. டானை ஒவ்வொரு ஒநாயாக கொன்று, குத்தி கிழிக்கின்றன. இத்தனைக்கும் இவன்தான் மேலே அமர்ந்திருக்கும் பார்க்கரின் காதலன். காதலியின் கண் முன்னே காதலனை ஓநாய்கள் கொன்று தின்கின்றன. பெரும் குரலெடுத்து கதறி அழுவதைத்தவிர அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

உதவிக்கு யாருமே இல்லாமல், கடும்குளிரில், கீழே ஓநாய்கள் சுற்றி திரிய அந்த நண்பர்களின் கதி என்ன என்பதை நமக்கு வெட வெடத்துப்போகும்படி சொல்லி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் இதுபோன்ற டூ ஆர் டை கதைக்களன்கள் நிறைய வந்திருந்தாலும் இந்த திரைப்படம் நமக்குள் ஒரு ஆர்வத்தையும், டென்ஷனையும் விதைத்துக்கொண்டே போகிறது. எப்படிடா இவர்கள் தப்பிக்க போகிறார்கள் என்ற டென்ஷனை நமக்குள்ளும் ஏற்றிவிட்டு ஜாலியாக போக்குகாட்டுகிறது திரைக்கதை.

அதுவும் பார்க்கர் என்ற அந்தப்பெண் இரவில் தன் கையை இரும்புக்கம்பியின் மீது பிடித்துக்கொண்டு தூங்கிவிடுவார். காலையில் விடிந்ததும் அந்தக்கை இரும்புடன் சேர்த்து குளிரில் இறுகி இருக்கும். அதை பிய்த்து எடுப்பதற்குள் அவர்படும் பாடு அப்ப்ப்ப்பா.... நமக்கே வியர்க்கிறது.

பக்கதில் இருப்பவனுக்கு தெரியாமல் பேண்டுடன் சேர்த்து யூரின் போகும் காட்சியில் பார்க்கர் ஒருவித அசிங்கமான குற்ற உணர்ச்சியுடன் ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாருங்கள். க்ளாஸ்...

ஆடம் க்ரீன்தான் எழுதி இயக்கி இருக்கிறார். பார்க்கும் ரசிகனுக்கு இவர்கள் அனுபவிக்கும் அந்த கஷ்டத்தை டிரான்ஸ்பர் செய்த விதத்தில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். கேமராமேனின் பங்கு எத்தகையது என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். கடும்குளிரின் அதே உணர்வை நமக்கும் கொடுப்பதில் கேமராவின் டோனும் மூட் ஆஃப் லைட்டிங்கும் பெரும்பங்கு வகித்திருக்கிறது.

இப்படி ஒரு குளிரில், அந்தரத்தில், கீழே ஓநாய்கள் சுற்றித்திரிய இத்தனை பேராபத்துக்களுடன் நாம் மாட்டிக்கொண்டால்??? ஐயோ நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த எண்ணத்தை விதைத்த விதத்தில் இந்தப்படம் ஜெயித்திருக்கிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய சினிமா...

பதிவின் மூலம் : கவிதை காதலன்

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus