திரைவிமர்சனம்
Typography

நடுநடுவே காபி டீ க்கு பதிலாக, ரத்தத்தை குடித்துவிட்டு கதை எழுதுகிற இயக்குனர்கள் அவ்வளவு ரத்தத்தையும் ஸ்கிரிப்ட்டில் கொட்டி வைக்கிற விந்தை இன்று நேற்றல்ல... மணிரத்னம் அறிமுகமான காலத்திருந்தே இருப்பதால், ‘சத்ரியன்’ மற்றுமொரு ரத்தப்பட வரிசையில் சேர்கிறது! நடு நடுவே அந்த ரத்தம் நமது காதுக்குள்ளிருந்தும் கொட்டுவதுதான் படு சோகம்!

கத்தியை எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்கிற படுபயங்கர பழமொழிக்கு இன்னும் எத்தனை காலத்திற்குதான் சப்பை கட்டு கட்டி சடுகுடு நடத்துவார்களோ, அந்த வன்முறைக்கே வெளிச்சம். இருக்கட்டும்... விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் ஜோடியாக நடித்து திருச்சியிலேயே ‘வேக’ வைக்கப்பட்ட இந்த படம் சொல்லும் பகுமானம் என்ன? வெகுமானம் என்ன?

திருச்சியை யார் ஆள்வது என்கிற பிரச்சனை ரவுடிகளுக்குள். அவர்களை இயக்கி வரும் மந்திரி நந்தகுமார், தாதாக்களில் ஒருவரான ஷரத்தை, மற்றொரு ரவுடியான அருள்தாசை விட்டு ‘போட’ வைக்கிறார். அப்புறமென்ன? அருள்தாஸ்தான் அடுத்த ராசா. ஷரத் இடத்திற்கு வரும் விஜய் முருகன், அந்த குடும்பத்தின் மீது தன் விசுவாசத்தை வைக்கிறார். கல்லூரிக்கு போய் வரும் ஷரத்தின் மகளுக்கு பாதுகாப்பாக விக்ரம் பிரபுவை அனுப்பி வைக்க... அவர்களுக்குள் லவ். ஜோடியாக எஸ்கேப் ஆகிவிடும் லவ்வர்சை தேடிக் கிளம்புகிறது விஜய்முருகன் படை. போகிற போக்கில் அருள்தாசையும் போட்டுத்தள்ளிவிட்டு கிளம்புகிறார் விக்ரம் பிரபு. அதற்கப்புறம் திருச்சி என்னாகிறது? துரத்தி வரும் விஜய் முருகன் என்னாகிறார்? க்ளைமாக்ஸ்!

தன்னை ‘விசுவாசிக்கிற’ அறிவுள்ள யாரையாவது பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை விக்ரமுக்கு ஏற்படுத்தியிருக்கிறது இப்படம். மற்றபடி தனக்கு கொடுத்த கேரக்டரை புத்தியில் வாங்கி நெற்றி மேல் சுமந்திருக்கிறார் அவர். மஞ்சிமாவின் வீட்டுக்குள் புகுந்து பெண் கேட்கிற காட்சி துணிச்சல் என்றால், அங்கேயும் தன் கோபத்தை அடக்க முடியாமல் கத்தியை நீட்டுவது கேரக்டரின் மீது வைக்கப்பட்ட அழுத்தம். ஆனால் இதுபோல் சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் படத்தில் வேறு இடங்களில் அமையாமல் போனது துரதிருஷ்டமே.

படித்த மாணவிகள், ரவுடிகளை காதலிப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிஜமல்ல என்றாலும், படத்தில் அதற்கான நியாயத்தை காட்ட முடிந்தளவுக்கு போராடியிருக்கிறார் டைரக்டர். துறுதுறு மஞ்சிமா மோகனும் தன் துறுதுறு நடிப்பால் கவர்ந்திருக்கிறார். லவ்வை சொல்கிற துணிச்சலில் ஆண்கள் பின் தங்கியும் பெண்கள் மிதமிஞ்சியும் இருக்கிறார்கள் என்கிற கருத்து, மஞ்சிமாவால் மற்றுமொருமுறை அழுத்தமாக ‘டிக் ’அடிக்கப்பட்டுள்ளது.

படத்தில் வரும் மற்றொரு ஜோடியான வேட்டையன்- ஐஸ்வர்யா தத்தாவுக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் கிடைத்த கேரக்டரில் ஒழுங்காக நடித்து பாஸ் பண்ணியிருக்கிறார்கள். அதுவும் ஐஸ்வர்யா விடும் சப் சப் அறைகள்.... எதில் போய் முடியும் என்பதை பெண்கள் புரிந்து கொள்வது முக்கியம்.

பெரிய தாதாவின் மகனாக இருந்தாலும், துணிச்சல் இல்லாத பையனாக சவுந்தர்ராஜா. மிக இயல்பாகவும் அழகாகவும் அந்த கேரக்டரை வாழ வைத்திருக்கிறார் அவர்.

படத்தில் யோகிபாபு இருக்காரு... ஆனா இல்ல! (இதுதான் ஒப்புக்கொள்ளவே முடியாத ஏமாற்றம்)

பல முக்கியமான காட்சிகள் கூட தடபுடலாக ஆரம்பித்து சவசவவென முடிவது பெரும் ஆயாசத்தை தருகிறது.

பாடல்களில் ராக ராஜாங்கமே நடத்தியிருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. முக்கியமாக ‘மைனா ஒண்ணு...’ பாடல் மனசுக்குள் ரிப்பீட் அடிக்கும். பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் ராஜாவின் இளவல்.

கதையில் வீசப்பட்ட கத்தியை பிடுங்கி, எடிட்டரும் சுற்றியிருந்தால் காட்சிகளில் ஒரு ‘நறுக் சுருக்’ விறுவிறுப்பு கிடைத்திருக்கக் கூடும்!

வெல்ல முடியாத சத்ரியன்தான். ஆனால் வெல்ல மண்டியில் எறும்பு அடித்துக் கொண்டிருக்கிறாரே... என்ன பண்ண?

- ஆர்.எஸ்.அந்தணன்

Most Read